தேவேந்திரகுல வேளாளர் பிரிவில் சேர்க்கக்கூடாது என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கடையர் இன மக்கள்
தேவேந்திரகுல வேளாளர் பிரிவில் தங்களை சேர்க்கக்கூடாது என வலியுறுத்தி கடையர் இன மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
தமிழக அரசு பள்ளன், குடும்பன், தேவேந்திரகுலத்தான், பன்னாரி, காலாடி, கடையன் உள்ளிட்ட 7 பிரிவினை தேவேந்திரகுல வேளாளர் என பொதுவாக அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு பட்டங்கட்டியர் கடையர் பேரவை சார்பில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு ஏராளமானோர் திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கோபு, மாவட்ட செயலாளர் ஜோசப், பொருளாளர் ஜேம்ஸ் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களை தேவேந்திரகுல வேளாளர் என பொதுவாக அழைக்க கூடாது என்றும், இதற்கு பரிந்துரைக்கப்படும் என அறிவித்த முதல்-அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தும் கொட்டும் மழையில் குடையை பிடித்துக்கொண்டு கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து அனைவரும் திரளாக சென்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
போராட்டம் நடத்தப்படும்
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஆதிதிராவிடர் இன பிரிவுகளில் உள்ள குடும்பன், பன்னாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பன்னன் ஆகிய பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யக்கூடாது. இதில் எங்களது சாதியான கடையன் சாதியை எக்காரணம் கொண்டும் சேர்க்க கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தார். மேற்கண்ட கோரிக்கைபடி கடையன் சாதியை ஒன்றாக இணைக்க கூடாது என்றும் இதனை மீறி சேர்த்தால் ஒட்டுமொத்த கடையன் சாதியினரும் திரளாக வந்து தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன்கார்டு முதலியவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story