புயல்-வெள்ள சேத மறுசீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்


புயல்-வெள்ள சேத மறுசீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2020 8:36 AM IST (Updated: 8 Dec 2020 8:36 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் புயல்-வெள்ள சேத மறுசீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

கடலூர்,

புரெவி புயல் மறுசீரமைப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சிறப்பு அதிகாரிகள் அமுதவள்ளி, டி.பி.ராஜேஷ், விசுமகாஜன், மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, சட்டமன்ற உறுப்பினர்கள் என்.முருகுமாறன், கே.ஏ.பாண்டியன், கலைச்செல்வன், சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மறுசீரமைப்பு

கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய குழுவினர் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்தனர். ஆகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்கள் முழுமையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகம் துரிதமாக மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிந்தவுடன் உள்ளாட்சி மற்றும் நகராட்சி அமைப்புகள் நோய் தொற்று பரவாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். முகாம்களில் தங்கி உள்ள 10 லட்சத்து 6 ஆயிரத்து 323 பேருக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

நிவாரண தொகை

தொடர்ந்து, புயலினால் ஏற்பட்ட கனமழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண தொகையாக தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.8 லட்சத்திற்கான காசோலை, மழையினால் காயமடைந்த ஒருவருக்கு ரூ.4 ஆயிரத்து 200-க்கான காசோலை, பசு மாடு இழந்த 4 பயனாளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், கன்றுகள் இழந்த 5 பயனாளிகளுக்கு தலா ரூ.16 ஆயிரம் வீதம் ரூ.80 ஆயிரம், ஆடுகள் இழந்த 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத் வழங்கினர்.

மேலும் ஆட்டு குட்டிகள் இழந்த 2 பயனாளிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம், கூரை வீடுகள் பகுதியாக பாதித்த 13 பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 100 வீதம் ரூ.53 ஆயிரத்து 300 என 29 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினர்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவன், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், சப்-கலெக்டர்கள் மதுபாலன், பிரவின்குமார், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Next Story