கடலூரை மீள விடாமல் துரத்தும் கனமழை வடியாத வெள்ளத்தால் மக்கள் கடும் அவதி


கடலூரை மீள விடாமல் துரத்தும் கனமழை வடியாத வெள்ளத்தால் மக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 8 Dec 2020 8:38 AM IST (Updated: 8 Dec 2020 8:38 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நேற்று 6-வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்தது. மீளவிடாமல் துரத்தும் மழையாலும், வடியாத வெள்ளத்தாலும் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

கடலூர்,

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி தொடங்கிய பருவமழை, தற்போது தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. ஒரு லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன.

இதற்கிடையில் நேற்று முன்தினம் பகலில் மழை சற்று ஓய்ந்து இருந்தது. இதனால் வீடுகளை சூழ்ந்திருந்த வெள்ளம் மெதுவாக வடியத்தொடங்கியதால் பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதற்கிடையில் நள்ளிரவில் ஒரு மணி நேரம் கன மழை கொட்டித்தீர்த்தது. பின்னர் விடிய, விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது. நேற்று காலை 9.15 மணி முதல் 1 மணி நேரம் மீண்டும் கனமழை கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு மதியம் வெயில் அடித்தது. பின்னர் 6 மணிக்கு மீண்டும் மழை பெய்தது.

வீடுகளுக்குள் புகுந்தது

இந்த கனமழையால் கடலூர் நகரில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோரம் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் மழைநீரில் மூழ்கின. மேலும் கடலூர் கோண்டூர், எஸ்.என்.சாவடி சாந்திநகர், தானம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மீண்டும் மழைநீர் சூழ்ந்தது.

கடலூர் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, வீதிக்கு வந்தனர்.

சாலை மறியல்

இதேபோல் கடலூர் கோண்டூர் காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் புகார் அளித்தும், மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை வீதிக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து சென்று, பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

சுகாதார சீர்கேடு

இதுதவிர வீடுகளுக்குள் புகுந்த மழைநீருடன், கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்பதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்க முடியாமல் அருகில் உள்ள முகாம்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்று தங்கியுள்ளனர். மேலும் தொடர்ந்து 6 நாட்களாக குடியிருப்பு பகுதியில் மழைநீருடன், கழிவுநீரும் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, பண்ருட்டி, குள்ளஞ்சாவடி, காட்டுமன்னார்கோவில், கொத்தவாச்சேரி மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று கனமழை பெய்தது. விருத்தாசலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வடவாடி ஏரி நிரம்பி வழிகிறது.

அழுகிய பயிர்கள்

மங்களூர் ஒன்றியம் சிறுபாக்கம், அடரி, அரசங்குடி, ஒரங்கூர், மா.புதூர், விநாயகநந்தல், பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, மரவள்ளி, கருணை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழையால் வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க முடியாததால், மரவள்ளி, கருணை உள்ளிட்ட பயிர்கள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களை மழைநீர் மூழ்கடித்துள்ளது.

கோவில் மீது விழுந்த மரம்

திட்டக்குடி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் திட்டக்குடி மேலவீதி மாரியம்மன் கோவிலில் இருந்த பழமை வாய்ந்த வேப்பமரம் ஒன்று வேரோடு சாய்ந்து கோவில் மீது விழுந்தது. இந்த மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 6-வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்ததால் மழை பாதிப்பில் இருந்து மீள முடியாமலும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமலும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதற்கிடையே கடலூர் மாவட்ட மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மேலும் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக லால்பேட்டையில் 60.8 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக காட்டுமயிலூரில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

காட்டுமன்னார்கோவில் -54.4

கொத்தவாச்சேரி -54

அண்ணாமலைநகர் 26.8

சேத்தியாத்தோப்பு -18.6

கடலூர் -17.3

சிதம்பரம் -17

பரங்கிப்பேட்டை -16

ஸ்ரீமுஷ்ணம் -14.1

புவனகிரி -13

வானமாதேவி -13

விருத்தாசலம் -12.3

குறிஞ்சிப்பாடி -12.3

கீழ்செருவாய் -11

பெலாந்துறை -9.2

தொழுதூர் -9

குப்பநத்தம் -7.2

வேப்பூர் -5

வடக்குத்து -5

பண்ருட்டி -4.5

மேமாத்தூர் -4

Next Story