நாகர்கோவில் அருகே ஆலை கழிவுநீர் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு


நாகர்கோவில் அருகே ஆலை கழிவுநீர் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Dec 2020 8:44 AM IST (Updated: 8 Dec 2020 8:44 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே ஆலை கழிவுநீர் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் குருகுலம் சாலை அருகே ஒரு தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பில் அப்பகுதியில் உள்ள ஒரு ஆலை கழிவுநீர் கடந்த சில ஆண்டுகளாக ஊற்றப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், தண்ணீரின் சுவை மாறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். எனவே ஆலை கழிவுநீரை சம்பந்தப்பட்ட இடத்தில் ஊற்றக்கூடாது என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் ஆலை கழிவுநீர் அங்கு தொடர்ந்து ஊற்றப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று மதியம் கழிவுநீர் ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்தனர். பின்னர் லாரியின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கழிவுநீர் ஆய்வு

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜாக்கமங்கலம் போலீசார் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “லாரியில் கொண்டு வரும் கழிவுநீர் எங்கிருந்து வருகிறது என்றும், அதனால் மண் வளத்துக்கு பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா? என்றும் சரிவர தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட கழிவுநீரை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு முடிவில் கழிவுநீரால் மண்வளத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்தால் உடனடியாக கழிவுநீரை வெளியேற்றும் ஆலையை மூடவேண்டும்“ என்று மக்கள் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு கழிவுநீரை கொண்டு வந்தவர்கள் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார், லாரியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கழிவுநீரை பரிசோதனைக்கு கொடுக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. பின்னர் ஒரு பாட்டிலில் கழிவுநீர் நிரப்பப்பட்டு ஆய்வுக்காக போராட்டம் நடத்திய மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து அங்கு ஏற்பட்டு இருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Next Story