அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொண்டை கடலை வழங்க கோரி தாலுகா அலுவலகங்களில் காங்கிரசார் உள்ளிருப்பு போராட்டம்


அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொண்டை கடலை வழங்க கோரி தாலுகா அலுவலகங்களில் காங்கிரசார் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2020 8:51 AM IST (Updated: 8 Dec 2020 8:51 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொண்டை கடலை வழங்க வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் காங்கிரசார் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கிள்ளியூரில் நடந்த போராட்டத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 71 பேர் கைது செய்யப்பட்டனர்.

களியக்காவிளை,

ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட கார்டுதாரர்களுக்கு 5 கிலோ கொண்டை கடலை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொண்டை கடலை வழங்க வேண்டும். முன்னுரிமை உள்ள ரேஷன் கார்டுதாரர்கள், அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுதாரர்கள், முன்னுரிமை இல்லாத கார்டுதாரர்கள் பட்டியலை மறு பரிசீலனை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று காலையில் கிள்ளியூர் தாலுகா அலுவலகம் முன்பு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொண்டை கடலை வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

எம்.எல்.ஏ. கைது

அவர்களிடம் கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் பேச்சுவார்த்தை நடத்தி அலுவலகத்திற்குள் போராட்டம் நடத்துவது சட்டத்துக்கு புறம்பானது எனக்கூறினார். இதையடுத்து காங்கிசார் அலுவலகத்தின் வெளியே சென்று தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அங்கு நின்றிருந்த போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் 14 பெண்கள் உள்பட 71 பேர் கைது செய்து ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தையொட்டி தாலுகா அலுவலகம் முன்பு கருங்கல் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பிரின்ஸ் எம்.எல்.ஏ.

தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

இதில் பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், தக்கலை யூனியன் தலைவர் அருள்ஆன்றனி, முத்தலகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் சிம்சன், தக்கலை வட்டார தலைவர் ஜாண் கிறிஸ்டோபர். மாவட்ட துணை தலைவர் ஜோன்இமானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் வட்ட வழங்கல் அலுவலர் ஜாண்கெனியை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

விளவங்கோடு

விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு மேல்புறம் வட்டார தலைவர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். விளவங்கோடு பஞ்சாயத்து தலைவர் லைலா ரவிசங்கர், மேல்புறம் யுனியன் கவுன்சிலர் ரவிசங்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாலின்,

ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திவாகர், குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

திருவட்டார்

திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்டார காங்கிரஸ் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. வட்டார தலைவர் ஜெகன் ராஜ் தலைமை தாங்கினார். மேற்கு வட்டார தலைவர் காஸ்ட்டன் கிளிட்டஸ் முன்னிலை வகித்தார்.

இதில் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் டாக்டர் தம்பி விஜயகுமார், மாவட்ட செயலாளர்கள் ஐ.ஜி.பி. லாரன்ஸ், ஜான் இக்னேஷியஸ், வர்கீஸ், மாவட்ட பொதுச் செயலாளர் மோகன்தாஸ், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின் மேரி, காட்டாத்துறை பஞ்சாயத்து தலைவர் இசையால், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன், யூனியன் கவுன்சிலர்கள் ஜெபா, ஜெயஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் இறுதியில் வட்ட வழங்கல் அதிகாரி மேத்யூ ஜெகஜோசிடம் மனு அளிக்கப்பட்டது.

Next Story