தாராபுரம் அருகே வேன் மீது மரம் விழுந்தது; மளிகை கடைக்காரர் பலி


தாராபுரம் அருகே வேன் மீது மரம் விழுந்தது; மளிகை கடைக்காரர் பலி
x
தினத்தந்தி 8 Dec 2020 9:32 AM IST (Updated: 8 Dec 2020 9:32 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே வேன் மீது மரம் விழுந்து மளிகை கடைக்காரர் பலியானார்.

தாராபுரம்,

தாராபுரம் அருகே உள்ள சோமனூத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 45). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு ரஞ்சித்குமார் என்ற மகனும் பரணி என்ற மகளும் உள்ளனர். அசோக்குமார் தனது கடைக்கு தேவையான மளிகை பொருட்களை வேனில் தினமும் தாராபுரம் சென்று வாங்கி வருவது வழக்கம்.

அதன்படி நேற்று காலையில் தாராபுரத்தில் உள்ள ஒரு மொத்த வியாபாரம் கடை ஒன்றில் மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு வேனில் சோமனூத்து நோக்கி வந்து கொண்டிருந்தார். வேனை அவரே ஓட்டினார். அப்போது காற்று பலமாக வீசியது.

பலி

இவருடைய வேன் தாராபுரம்-உடுமலை சாலையில் சிக்கனாபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான அரச மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து அசோக்குமார் ஓட்டிச்சென்ற வேன் மீது விழுந்தது. இதில் அசோக்குமார் சிக்கிக்கொண்டார். உடனே அந்த வழியாக சென்றவர்கள் அலங்கியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசாரும், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் விரைந்து வந்து எந்திரம் மூலம் மரத்தை அறுத்து அசோக்குமாரை மீட்க முயன்றனர். ஆனால் அசோக்குமார் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story