நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்-மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்-மனைவி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). விவசாயி. இவரது மனைவி பிரேமா (30). இவர்கள் இருவரும் நேற்று மண்எண்ணெய் பாட்டிலுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென அவர்கள் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
பொய் வழக்கு
முன்னதாக முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் ஏற்கனவே வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்தேன். இந்த நிலையில் எங்களது ஊரில் இது தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு வக்கீலை அறிமுகம் செய்து வைத்தேன்.
இதற்காக எதிர்தரப்பினர் போலீசாரின் உதவியுடன் என் குடும்பத்தார் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி எனது மகன் பிரபு தாக்கப்பட்டான். சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அன்றே போலீசில் புகார் செய்தோம். ஆனால் இதுவரை எனது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே சேந்தமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story