தூத்துக்குடி- கோவில்பட்டியில் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி- கோவில்பட்டியில் இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2020 3:45 AM IST (Updated: 8 Dec 2020 10:45 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, கோவில்பட்டியில் இந்திய மருத்துவ சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு இதழில் அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை, ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பை கண்டித்தும், இதை ரத்து செய்யக்கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை சால் தந்திரம் என்று பட்டியலிட்டு, இந்த சிகிச்சைகளை செய்ய ஆயுர்வேத டாக்டர்களுக்கு அனுமதி அளித்து உள்ளது. இந்த அறுவை சிகிச்சை முறைகள் நவீன மருத்துவத்தை சார்ந்தது. எந்தவித முன்பயிற்சியும் இல்லாமல் சிகிச்சைக்கு பிறகு கொடுக்க வேண்டிய நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் பற்றிய போதிய அறிவும் இல்லாமல் ஆயுர்வேத டாக்டர்கள் சிகிச்சை அளிப்பது சாத்தியம் அல்ல. அப்படி செய்தால் மருத்துவ சேவையில் பாதிப்பும், நோயாளிகள் சிகிச்சையில் குளறுபடியும் ஏற்படும். அவரவர் மருத்துவத்தை அவரவர் செய்வது நல்லது, மக்களின் நலனுக்கும் நல்லது. ஆகையால் கூட்டு மருத்துவ முறையை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர், செயலாளர் ராஜாவிக்னேஷ், பொருளாளர் செந்தில்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்க கோவில்பட்டி கிளை தலைவர் டாக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் டாக்டர் என்.சீனிவாசன், இந்திய மருத்துவ சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் மோசஸ்பால், கோவில்பட்டி இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் பத்மாவதி, பொருளாளர் டாக்டர் கமலா மாரியம்மாள், டாக்டர் லதா ஸ்ரீவெங்கடேஷ் மற்றும் ஏராளமான டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story