கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; காவலாளி பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தனியார் கம்பெனி காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பையனூரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 53). இவர் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று இவர், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுத்துவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழக பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக மாமல்லபுரம் அரசு சிற்பக்கலைக்கல்லூரி அருகில் உள்ள வளைவினை கடக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு புதுச்சேரி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அன்பழகன் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.
விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் தன்னை யாராவது தாக்கி விடுவார்களோ என பயந்து விபத்து ஏற்படுத்திய காரை நடுரோட்டிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் தகவலறிந்து மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின்பேரில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து காரணமாக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சர்வீஸ் சாலையில் அனைத்து வாகனங்களும் புதுச்சேரி செல்ல அனுமதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story