புழல் சிறையில் வெளிநாட்டு கைதிகள் மோதல் - ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி


புழல் சிறையில் வெளிநாட்டு கைதிகள் மோதல் - ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 9 Dec 2020 3:00 AM IST (Updated: 9 Dec 2020 12:38 AM IST)
t-max-icont-min-icon

புழல் சிறையில் கனடா மற்றும் இலங்கையை சேர்ந்த கைதிகள் 2 பேர் மோதிக்கொண்டனர். இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்த கனடாவை சேர்ந்த கைதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

செங்குன்றம்,

புழல் சிறையில் 1,700-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள், 700-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், 100-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கொடிய குற்றங்களில் ஈடுபடுபவர்களும், வெளிநாட்டு கைதிகளும் இங்குள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

விசாரணை சிறையில் கனடா நாட்டைச் சேர்ந்த கும்மிடி எபினேசர் (வயது 40) என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அடைக்கப்பட்டு உள்ளார். இலங்கையைச் சேர்ந்த குமரேசன் என்ற முருகன் (38) என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் போலி பாஸ்போர்ட் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவர்கள் இருவரும் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அடிக்கடி இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்படுவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு அறையை சுத்தம் செய்யும்போது மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதில் கும்மிடி எபினேசருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோதல் சம்பவம் குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து கைதிகளின் மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.

கைதிகள் மோதிக்கொண்ட சம்பவம் புழல் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story