பெரம்பலூர் மாவட்டத்தின் குற்றாலம்: லாடபுரம் மயிலூற்று அருவியில் நீர்வரத்து தொடங்கியது: பொதுமக்கள் குளிக்க தடை


பெரம்பலூர் மாவட்டத்தின் குற்றாலம்: லாடபுரம் மயிலூற்று அருவியில் நீர்வரத்து தொடங்கியது: பொதுமக்கள் குளிக்க தடை
x
தினத்தந்தி 8 Dec 2020 11:19 PM GMT (Updated: 8 Dec 2020 11:19 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தின் குற்றாலம் என்று அழைக்கப்படும் லாடபுரம் மயிலூற்று அருவியில் நீர்வரத்து தொடங்கி உள்ளது. இங்கு இயற்கையை பாதுகாக்கவும், கொரோனா தொற்று பரவலை தடுக்கவும் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையை தொடர்ந்து கடந்த ஒருவாரமாக பரவலான மழை பெய்துவருகிறது. பெரம்பலூரில் நேற்று காலை சிறிது நேரம் வெயில் அடித்தது. அதனை தொடர்ந்து மழை பெய்தது. மதியமும், மாலையும் சாரல் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை இம்மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம் மில்லிமீட்டரில் வருமாறு-

செட்டிகுளம்-7, பாடாலூர்-8, அகரம்சிகூர்-50, லெப்பைக்குடிகாடு-45, புதுவேட்டக்குடி-37, பெரம்பலூர்-11, எறையூர்-20, கிருஷ்ணாபுரம்-23, தழுதாழை-22, வி.களத்தூர்-24, வேப்பந்தட்டை-18 என பதிவாகியுள்ளது.

நீர்வரத்து தொடங்கியது

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்தொடங்கி உள்ளது. பச்சைமலை தொடரில் கடந்த 5 நாட்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் பெரம்பலூரில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில், லாடபுரம் அருகே பச்சைமலை தொடரில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தின் குற்றாலம் என்று அழைக்கப்படும் மயிலூற்று அருவியில் நீர்வரத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

தொடர் மழை காரணமாக மலைப்பகுதிகளில் ஊற்றுகள் கசியத்தொடங்கி உள்ளதாலும், வடகிழக்கு பருவமழை தொடரும்பட்சத்தில் இந்த ஆண்டு அருவியில் நீர்வரத்து முன்கூட்டியே தொடங்கி உள்ளது. மயிலூற்று அருவி அமைந்துள்ள பச்சமலையின் மற்றொரு பகுதியில் உச்சியில் மற்றொரு பெரிய அருவியான ஆனைக்கட்டி (செக்காத்திப்பாறை) அருவியிலும் நீர்வரத்து தொடங்கி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழையை தொடருமானால், மயிலூற்று அருவி மற்றும் ஆனைக்கட்டி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆனை கட்டி அருவியில் நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் லாடபுரம், ஈச்சம்பட்டி, குரும்பலூர், பாளையம், செஞ்சேரி, அரணாரை, பெரம்பலூர் துறைமங்கலம் ஏரிகளை நிறைக்கும். கடந்த ஆண்டு மயிலூற்று அருவியில் நீர்வரத்து இல்லை. ஆனால் தற்போது பெய்துவரும் மழைகாரணமாக பச்சைமலையில் சீசன் தாமதமாக தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை

மயிலூற்று அருவிக்கு வந்து செல்லும் இளைஞர்கள் பலர் மதுபாட்டில்களை எடுத்துச்சென்று, மதுஅருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபடுவதுடன், இயற்கையை சூழலை பாதிப்பிற்கு உள்ளாக்குவதாலும், கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும், பொதுமக்கள் அருவிக்கு சென்று குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் வனத்துறை சார்பில் வனக்காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மயிலூற்று அருவிக்கு குளிக்க வரும் பொதுமக்களை சற்று தொலைவிலேயே வனத்துறையினர் தடுத்து, திருப்பி அனுப்பிவிடுகின்றனர். பச்சைமலையின் இயற்கை சூழலை பாதுகாக்கவும், மயிலூற்று அருவிஅமைந்துள்ள பகுதியை சீர்கேடு ஏற்படாதவாறு பாதுகாத்திடவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story