மாத்தூரில் அரிவாளால் மிரட்டி தம்பதியிடம் சங்கிலி பறித்த திருச்சியை சேர்ந்த 2 பேர் கைது


மாத்தூரில் அரிவாளால் மிரட்டி தம்பதியிடம் சங்கிலி பறித்த திருச்சியை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2020 5:14 AM IST (Updated: 9 Dec 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

மாத்தூரில் அரிவாளால் மிரட்டி தம்பதியிடம் சங்கிலி பறித்த திருச்சியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா மாத்தூர் ராமசாமி நகரை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 30). இவரது மனைவி ரம்யாதேவி (28). கடந்த 6-ந்தேதி 9 மணி அளவில் மர்மநபர்கள் கதவை தட்டியுள்ளனர். இதனால் திறந்து வெளியே வந்த திலீப்குமாரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி வீட்டுக்குள் தள்ளினர். பின்னர் அவரது மனைவி ரம்யாதேவியின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். மேலும் அவர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது, மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அரியலூரில் இருப்பது தெரியவந்தது.

மேலும் அவர் கட்டிட மேஸ்திரி வேலை பார்ப்பதும், அவரிடம் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த பெர்னாண்டஸ் ஜார்ஜ் (24) என்பவர் சென்ட்ரிங் வேலை பார்த்ததும், அவர் கட்டிட மேஸ்திரியின் மோட்டார் சைக்கிளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவல் வாங்கி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் பதுங்கி இருந்த பெர்னாண்டஸ் ஜார்ஜை பிடித்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் பெர்னாண்டஸ் ஜார்ஜ் மாத்தூர் ராமசாமி நகரிலுள்ள தனது நண்பரை பார்க்க அடிக்கடி அப்பகுதிக்கு வந்ததாகவும், அப்போது ரம்யாதேவி கழுத்தில் பெரிய தங்க சங்கிலி அணிந்து இருந்ததை பார்த்துள்ளார். இதனையடுத்து அதனை பறிக்க முடிவு செய்து பெர்னாண்டஸ் ஜார்ஜ், நண்பரான எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த மணிமுத்து (28) மற்றும் ஒருவரை அழைத்து சென்று சங்கிலியை பறித்த விவரம் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து தங்க சங்கிலியை கைப்பற்றினர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story