வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம் - நாராயணசாமி உறுதி


வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம் - நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 9 Dec 2020 4:00 AM IST (Updated: 9 Dec 2020 5:46 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி, 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி புதுவையில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி அவர்களது போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனை வாபஸ் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாகவும், சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும் நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

காங்கிரஸ் தொண்டன் என்ற அடிப்படையில் இந்த போராட்டத்துக்கு நானும் ஆதரவு தெரிவிக்கிறேன். புதுவையில் அமைதியாக போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். இந்த போராட்டத்தினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்கக் கூடாது.

அடுத்துவரும் சட்டமன்ற கூட்டத்தின்போது வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Next Story