வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கடை அடைப்பு; சாலை மறியல் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளியில் நடந்தது


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கடை அடைப்பு; சாலை மறியல் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளியில் நடந்தது
x
தினத்தந்தி 9 Dec 2020 8:33 AM IST (Updated: 9 Dec 2020 8:33 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு, திருக்காட்டுப்பள்ளியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாலை மறியல் போராட்டமும் நடந்தது.

திருவையாறு,

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி திருவையாறில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் சிவசங்கரன், ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன், மாவட்ட அவை தலைவர் தண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 150 பேர் கைது செய்யப்பட்டனர். திருவையாறு தெற்கு ஒன்றியம் சார்பில் கண்டியூர் கடைவீதியில் ஒன்றிய செயலாளர் கவுதமன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் திருப்பூந்துருத்தி பேரூர் செயலாளர் முகமது உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். திருவையாறு அருகே அம்மன்பேட்டையில் தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி தலைமையில் சாலை மறியல் நடந்தது. காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர்கள் மகாதேவன், அமர்சிங் ஆகியோர் தலைமையில் திருவையாறு பஸ் நிலையத்தில் சாலை மறியல் நடந்தது. இதில் மாவட்ட பொருளாளர் ராஜ், நகர தலைவர் பூபதிராஜா, மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், ராஜலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தையொட்டி திருவையாறு, கண்டியூர், நடுக்கடை ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திருக்காட்டுப்பள்ளி

முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை எதிரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 4 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். பூதலூர் நான்கு சாலை சந்திப்பு, வரகூர் சாலை உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியல் நடந்தது. திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் வங்கிகள், தபால் நிலையங்கள், ரேஷன் கடைகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின.

வல்லம்

வல்லத்தில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் தஞ்சை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அருளானந்தசாமி, வல்லம் நகர செயலாளர் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் நகர செயலாளர் முகமது பாட்சா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு உறுப்பினர் அபிமன்னன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக 110 பேர் மீது வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் செங்கிப்பட்டியில் சாலை மறியல் நடந்தது. இதில் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். செங்கிப்பட்டி -திருச்சி சாலையில் நடந்த இந்த போராட்டத்தின்போது கட்சியினர் அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது ஏறி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து 100 பேர் மீது செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக வல்லம் கடைவீதி, பஸ்நிலையம், மார்க்கெட், திருச்சி சாலை ஆகிய இடங்களில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சாலியமங்கலம்

சாலியமங்கலம் அருகே சடையார்கோவில் நான்கு வழி சாலையில் பல்வேறு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ராகவாம்பாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜகோபால், தி.க. கலை இலக்கிய அணி பொறுப்பாளர் நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story