கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு


கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 9 Dec 2020 9:57 AM IST (Updated: 9 Dec 2020 9:57 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், வயலில் இறங்கி அழுகிய நெற்பயிரை பார்வையிட்டார்.

கடலூர்,

தமிழகத்தில் சமீபத்தில் தாக்கிய ‘நிவர்’ புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளையும், விளைநிலங்களையும் சூழ்ந்த வெள்ளம் வடிவதற்குள் அடுத்த புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் தமிழகத்தை நெருங்குவதற்கு முன்பு வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கனமழை கொட்டித்தீர்த்தது.

இந்த மழையால் கடலூர், சிதம்பரம் நகரமட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களும் வெள்ளத்தில் மிதந்தன. வீராணம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியதால் அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்தது. இதில் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும், 50 ஆயிரம் ஏக்கர் மணிலா, கரும்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளது. மழை வெள்ளத்தால் சாலைகளும் சேதமடைந்துள்ளன.

வயலில் இறங்கி ஆய்வு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயல் மற்றும் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக காரில் கடலூர் சுற்றுலா மாளிகைக்கு மதியம் வந்தார். அங்கு மதிய உணவு சாப்பிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய காரில் புறப்பட்டார். முதலில் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் அணுக்கம்பட்டு கிராமத்தில் மழை வெள்ளம் மூழ்கடித்த வயலில் இறங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது 2 விவசாயிகள் அழுகிய நெற்பயிரை காண்பித்தனர். அந்த பயிரை வாங்கி அவர் ஆய்வு செய்தார்.

வீராணம் ஏரியை பார்வையிட்டார்

இதனை தொடர்ந்து மழை வெள்ளத்தால் சேதமடைந்த கடலூர்-சிதம்பரம் சாலையில் நடந்து சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின்னர் ஆணையம்பேட்டை கிராமத்தில், மாவட்டம் முழுவதும் மழைவெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை புகைப்படம் எடுத்து காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்ததை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். தொடர்ந்து அவர், வீராணம் ஏரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீராணம் ஏரியின் நீர்மட்டம் எவ்வளவு?, எத்தனை ஏக்கர் பாசனம் பெறுகிறது?, சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு எவ்வளவு கனஅடி நீர் அனுப்பப்படுகிறது? என்பது குறித்து கலெக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடை வழியாக உபரி நீர் வெளியேற்றப்படும் இடத்தையும், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநாரையூர் கிராம பகுதியையும் பார்வையிட்டார். ஆய்வின்போது மழை வெள்ள சேதம் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் முதல்-அமைச்சரிடம் விளக்கி கூறினர்.

நிவாரண பொருட்கள்

பின்னர் சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர் விழுந்த இடத்தையும், அதன் அருகில் உள்வாங்கிய சாலையையும், கடவாச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். தொடர்ந்து வல்லம்படுகையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஆய்வின்போது அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி, கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story