திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக 33 இடங்களில் மறியல்-கடையடைப்பு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,481 பேர் கைது
விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தில் 33 இடங்களில் மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,481 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் பல்வேறு மாநிலங் களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று பாரத் பந்த் அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் திண்டுக் கல்லை பொறுத்தவரை பாரத் பந்த் அறிவிக்கப்பட்டும் ஒருசில கடைகளை தவிர அனைத்து கடைகளும் நேற்று காலை வழக்கம் போல் திறந்து இருந்தன. அதேபோல் அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், ஒன்றிய செயலாளர் அஜாய்கோஷ் உள்ளிட்டோர் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே திரண்டனர். பின்னர் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் திருத்த சட்டங் களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். அதில் ஒருசிலர் கடைகளை அடைக் கும்படி வலியுறுத்தினர்.
அப்போது ஒரு கடையின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பொருட்களை ஒருவர் தள்ளிவிட்டார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து அழைத்து சென்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் எங்கிருந்தோ பறந்து வந்த கல், ஒரு கடை மீது விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு, வியாபாரிகள் கடைகளை உடனடியாக அடைத்தனர். இதற்கிடையே ஊர்வலமாக சென்றவர்கள் பெரியார் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து தி.மு.க.வினர் கட்சி அலுவலகத்தில் இருந்து பெரியார் சிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர். பின்னர் காமராஜர் சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க. வினர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் அந்த கட்சியினர் பெரியார் சிலை அருகே மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் அவர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் மனிதநேய மக்கள் கட்சியின் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் யாசர்அராபத் தலைமையில், அந்த கட்சியினர் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் முன்பு திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் நடந்தது. இதில் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
நத்தம் பஸ் நிலையம் அருகில் தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பழனியப்பன், பில்லான் மற்றும் கூட்டணி கட்சியினர் என பங்கேற்ற அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
பழனி மயில் ரவுண்டானா அருகில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
வேடசந்தூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இதற்கிடையே தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன் தலைமையில் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். எரியோட்டில் தி.மு.க. வேடசந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.
கோபால்பட்டி, சாணார்பட்டி, நொச்சிஓடைப்பட்டி, கம்பிளியம்பட்டி, அதிகாரிபட்டி ஆகிய இடங்களில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் மறியல் செய்தனர். இதில் சாணார்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மோகன், சாணார்பட்டி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமதாஸ் உள்பட பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். தொப்பம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னிவாடியில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சக்திவேல் உள்பட 35 பேரும், ரெட்டியார்சத்திரத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவகுருசாமி உள்பட 100 பேரும் கைது செய்யப்பட்டனர். நிலக்கோட்டையில் உள்ள வர்த்தக சங்கத்தினர் அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து நேற்று முழு கடையடைப்பு செய்தனர். இதனால் நிலக்கோட்டை நால்ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 33 இடங்களில் எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் 187 பெண்கள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 481 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மதியம் வரை கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதன்பின்னர் வழக்கம் போல் கடைகள் திறந்தன.
விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதால் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மேற்பார்வையில் அந்தந்த துணை சூப்பிரண்டுகள் தலைமையில் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையொட்டி திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திண்டுக்கல் பஸ்நிலையம், மெயின்ரோடு, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதியில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு உஷாராக இருக்கும்படி போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
Related Tags :
Next Story