விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்டத்தில் 18 இடங்களில் சாலை மறியல்; 1,940 பேர் கைது பெரும்பாலான கடைகள் அடைப்பு; கார், ஆட்டோக்கள் ஓடவில்லை
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிவகங்கை மாவட்டத்தில் 18 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 1,940 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை,
3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. இந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன்படி நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மதுரை முக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட கே.ஆர்.பெரிய கருப்பன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், மாணிக்கம், நகர செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட 324 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு வந்த கார்த்தி சிதம்பரம் எம்.பி., வேளாண் சட்டங்கள் குறித்து பேசினார். திருப்பத்தூரில் அண்ணாசிலை, காந்திசிலை, மதுரை ரோடு, பெரியகடைவீதி உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
சிவகங்கை நகரை பொறுத்தவரை மருந்துக்கடை, பால்கடை, பெட்ரோல் பங்க் தவிர அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. டாக்சி, கார், வேன், ஆட்டோக்கள் ஓடவில்லை. சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் அனைத்து கட்சியினர் ஊர்வலமாக சிவகங்கை பஸ் நிலையம் அருகே சென்றனர். அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, நகர் செயலாளர் துரை ஆனந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் எம்.எஸ்.கண்ணன், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வீரபாண்டி உள்பட 68 பேரை சிவகங்கை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கையை அடுத்த மதகுபட்டியில் மறியலில் ஈடுபட்டதாக சிவகங்கை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் பவானிகணேசன், தூஷாந்த்பிரதீப்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கிருஷ்ணன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சோனை, காங்கிரஸ் வட்டார தலைவர் வேலாயுதம் உள்பட 91 பேரை மதகுபட்டி போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகே பள்ளத்தூரில் தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சூரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முருகப்பன், பள்ளத்தூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கருப்பையா, காக்கூர் ராஜேந்திரன், கோட்டையூர் ராமசாமி, மாவட்ட மகளிரணி மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் அசோக், நகர அவைத்தலைவர் முத்துராமலிங்கம், ஒன்றிய பிரதிநிதி ராமு, சூரக்குடி பழனியப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று 18 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மொத்தம் 123 பெண்கள் உள்பட 1,940 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு அலுவலகங்கள், வங்கிகள் வழக்கம் போல இயங்கின.
Related Tags :
Next Story