ஆட்டை காப்பாற்ற முயன்றபோது தன்னை சுற்றிய மலைப்பாம்பை வெட்டிக் கொன்ற விவசாயி
குடியாத்தம் அருகே ஆட்டை விழுங்க முயன்ற மலைப்பாம்பை வெட்டிக்கொன்ற விவசாயிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி கணவாய் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 62) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை நேற்று கல்லப்பாடி காப்புக்காடுகள் பகுதியில் உள்ள பகுதிக்குள் மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது பெரிய மலைப்பாம்பு ஒன்று ஆட்டை சுற்றிக்கொண்டு விழுங்க முயற்சி செய்து கொண்டிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தசாமி மலைப்பாம்பிடமிருந்து ஆட்டை மீட்டுள்ளார். அப்போது அந்த மலைப்பாம்பு கோவிந்தசாமியை சுற்றியுள்ளது. இதனால் தன்னை காப்பாற்றிக்கொள்ள கத்தியால் மலைப்பாம்பை வெட்டியுள்ளார். இதில் மலைப்பாம்பின் தலை துண்டாகியது.
இதனையடுத்து கோவிந்தசாமி இது குறித்து யாருக்கும் சொல்லாமல் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அவர்கள் கோவிந்தசாமியை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக கூறவே சந்தேகம் கொண்டு அவரிடம் தீவிர விசாரணை செய்தனர்.
அப்போது ஆட்டை விழுங்க முன்ற மலைப்பாம்பை கத்தியால் வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் பார்க்கவ தேஜா, உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் பேரில், மலைப்பாம்பை வெட்டிக்கொன்ற கோவிந்தசாமிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர். அபராதத் தொகை செலுத்திய பின் கோவிந்தசாமி விடுவிக்கப்பட்டார்.
ஆட்டை விழுங்க முயன்ற மலைப்பாம்பை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலைப்பாம்பை வெட்டிக் கொன்ற சம்பவத்தில் கோவிந்தசாமி மட்டுமே ஈடுபட்டாரா? அல்லது வேறு யாராவது அவருக்கு உதவி செய்தார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story