பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடும் பணிகளை கலெக்டர் ஆய்வு


பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடும் பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Dec 2020 8:31 PM IST (Updated: 9 Dec 2020 8:31 PM IST)
t-max-icont-min-icon

பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடும் பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பிவிடும் பணிகளையும், நீர்வரத்து குறித்தும் கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதன் விவரம் வருமாறு.

வேலூர் மாநகராட்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் சதுப்பேரிக்கு பாலாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் பணிகளையும், கால்வாயில் உள்ள அடைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ள பணிகளையும், விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து வரும் தண்ணீரை ஏரிகளுக்கு திருப்பிவிடும் பிரிவு கால்வாய்களையும், மதகுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கவசம்பட்டு கொட்டாறு பாலத்தை ஆய்வு செய்து, கொட்டாறு வழியாக செல்லும் நீரை முறையாக கால்வாய்களுக்கு திருப்பி விடும் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து செதுவாலை, ஒக்கனாபுரம் ஏரிகளுக்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் வரும் கந்தனேரி அருகே கால்வாய்களை பார்வையிட்டு, கந்தனேரி ஊராட்சி பகுதியில் பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து ஏரிகளுக்கு நீரினை விகிதாசாரப்படி பிரித்து அனுப்ப அமைக்கப்பட்டுள்ள மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு ஏரியில் வீடு கட்டும் பணிகளை சிலர் செய்து கொண்டிருந்தனர். அதைப்பார்த்த கலெக்டர், அவர்களிடம் ஏற்கனவே அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனை பட்டா இடத்திற்கு குடிபெயருமாறு அறிவுறுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் பள்ளிகொண்டா அருகே உள்ள கீழாச்சூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பாலாற்று பகுதியிலிருந்து செதுவாலை, ஓக்கநாபுரம், கந்தனேரி, இறைவன்காடு ஆகிய ஏரிகளுக்கு செல்லும் கால்வாய் மூலம் தண்ணீர் பிரித்து அனுப்ப செய்யப்பட்டு உள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கே.வி.குப்பம் தாலுகாவுக்குட்பட்ட பசுமாத்தூர் ஏரிக்கு செல்லும் கால்வாயை ஆய்வு செய்து கால்வாய்களின் கரைகள் பலப்படுத்தி தண்ணீர் வீணாகாமல் ஏரிகளில் தேக்கி வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். காவனூர் ஏரிக்கு ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து நிரப்பும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடியாத்தம் தாலுகா வேப்பூர் ஏரிக்கு செல்லும் கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், தாசில்தார்கள் ரமேஷ், சரவணமுத்து, வத்சலா, ராஜேஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story