ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் பகுதிகளில் நகை திருடிய 3 பேர் கைது 25 பவுன் மீட்பு; கார், ஸ்கூட்டி பறிமுதல்


ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் பகுதிகளில் நகை திருடிய 3 பேர் கைது 25 பவுன் மீட்பு; கார், ஸ்கூட்டி பறிமுதல்
x
தினத்தந்தி 9 Dec 2020 9:12 PM IST (Updated: 9 Dec 2020 9:12 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் பகுதிகளில் நகைகளை திருடி சென்றதாக 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 பவுன் மீட்கப்பட்டது. கார், ஸ்கூட்டி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி திருப்பதி நகரை சேர்ந்தவர் செந்தமிழ் அரசு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா. இவரது வீட்டில் கடந்த மாதம் 1-ந் தேதி 18 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுபற்றி சுகன்யா அளித்த புகாரின் பேரில் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி ராசிபுரம் மாரப்பன் தோட்ட பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரது வீட்டில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 4 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது.

ராசிபுரம் வி.ஐ.பி. நகரிலுள்ள தண்ணீர் தொட்டி அருகே ஆசிரியர் சோமசுந்தரம் என்பவரிடமிருந்து 1½ பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

நாமகிரிப்பேட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தனியார் கல்லூரி ஒன்றின் கேன்டீனில் இருந்து ரூ.18 ஆயிரத்து 500 திருட்டு போனது. அதேபோல் வெண்ணந்தூரில் ஒருவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் நகை, மற்றும் இரண்டு ஜோடி வெள்ளிக்கொலுசு திருட்டு போனது. இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்ய நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமணக்குமார் மேற்பார்வையில், ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் தனிப்படை போலீசார் ராசிபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அந்த காரில் மூன்று பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தியதில் அவர்கள் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் விவரம் பின்வருமாறு:-

சதீஷ் என்கிற சி ஸ்டீபன் (37). இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள செம்மாம்பட்டு பூமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அந்தோணி தாஸ் என்பவரின் மகன் ஆவார்.

இன்னொருவர் மதுரை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பஞ்ச லிங்கத்தின் மகன் சிவராஜ் (44). மற்றொருவர் மதுரை மேலூர் முன்னாள் ராணுவ வீரர் காலனியைச் சேர்ந்த அய்யாவு என்பவரின் மகன் விஜயசங்கர் (46) ஆவார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். மேலும் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய கார், ஸ்கூட்டி மற்றும் ஆயுதங்களையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சதீஷ், சிவராஜ், விஜயசங்கர் ஆகிய 3 பேர் மீதும் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஒரு வீட்டில் கொள்ளை அடிப்பதற்கு முன்னதாக ஸ்கூட்டியில் சென்று குறிப்பிட்ட வீட்டை நோட்டம் விட்டு வந்த பிறகு நகைகளை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிச்சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஏற்கனவே பல இடங்களில் திருடியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு நீதிபதி உத்தரவின்பேரில் அவர்கள் 3 பேரும் ராசிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story