18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தல்
18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதிநாளாக கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தங்களது சங்க உறுப்பினர்கள், தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என 18 வயது பூர்த்தியடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அறிவுறுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடிகளில் அனைத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வசதிக்காக சாய்வுதள வசதி, சக்கர நாற்காலி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 105 மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.அனைத்து மாற்றுத்திறனாளிகளிடமும் கனிவுடன் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைத்துத் துறையிலும் செயல்படுத்தும் திட்டங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள நலத்திட்டங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. மாற்றுத்்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்தின் படி அனைத்து உரிமைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தாட்கோ உதவி மேலாளர் ராஜகுரு உள்பட அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story