வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி சேலத்தில் 3 இடங்களில் மறியல் போராட்டம் 56 பெண்கள் உள்பட 606 பேர் கைது


வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி சேலத்தில் 3 இடங்களில் மறியல் போராட்டம் 56 பெண்கள் உள்பட 606 பேர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2020 9:33 PM IST (Updated: 9 Dec 2020 9:33 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி சேலத்தில் 3 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 56 பெண்கள் உள்பட 606 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

மத்திய அரசு புதிதாக நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் அருகே நேற்று காலை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

போராட்டத்துக்கு அனுமதி கிடையாது என்பதால் முன் எச்சரிக்கையாக போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் ஏதேனும் கலவரம் ஏற்பட்டால் அதை தடுக்கும் வகையில் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவை தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதுதவிர போராட்டம் நடைபெறும் இடத்தை சுற்றியும் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் வகையில் போலீஸ் வாகனங்கள், அரசு பஸ்களும் அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து காலை 10.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிடப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென போலீசார் வைத்திருந்த தடுப்பு கம்பிகளை தள்ளிவிட்டு கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் செய்வதற்காக வேகமாக ஓடினர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்களையும் மீறி ஓடும் போது பெண்கள் உள்பட பலர் கீழே தவறி விழுந்தனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் பெரியார் மேம்பாலம் சாலை, அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலை, செரி ரோடு செல்லும் சாலை என நாலாபுறமும் அமர்ந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இந்த மறியலினால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் எல்லாம் நீண்ட தூரம் வரை அணிவகுத்து நின்றன.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 32 பெண்கள் உள்பட 452 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் வாகனங்களில் ஏற்றப்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இந்த மறியலினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த மறியலில் 13 பெண்கள் உள்பட 45 பேரும், கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் நடந்த மறியல் போராட்டத்தில் 11 பெண்கள் உள்பட 109 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் காவலில் வைக்கப்பட்டனர். சேலத்தில் 3 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் மொத்தம் 56 பெண்கள் உள்பட 606 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகுடஞ்சாவடியில் பஸ்நிறுத்த பகுதியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story