வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் அரசு ஊழியர் சங்கத்தினரும் போராட்டம்


வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் அரசு ஊழியர் சங்கத்தினரும் போராட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2020 9:51 PM IST (Updated: 9 Dec 2020 9:51 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கொட்டும் மழையில் நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவினாசியில் அரசு ஊழியர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், 

மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் ரத்னா ஜே.மனோகர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்களை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ரவி, நிர்வாகிகள் திருமலை, செந்தில்முருகன், வெங்கடேஷ், விஜயராகவன், கோல்டுசன், வைரமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில கட்டமைப்பு குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் கண்டன உரையாற்றினார். கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை தலைவர் ஈஸ்வரன், மண்டல செயலாளர் சுப்பிரமணியம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்தது. கொட்டும் மழையில் நனைந்தபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்க அவினாசி வட்ட கிளை சார்பாக அவினாசி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் சுமதி தலைமை தாங்கினார். இதில் திரளான பெண்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story