உடன்குடி பகுதியில் தி.மு.க. தேர்தல் பிரசாரம் - ராஜகண்ணப்பன்-அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
உடன்குடி பகுதியில் நடந்த தி.மு.க. பிரசார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர்.
உடன்குடி,
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தேர்தல் பணிக்குழு இணைத்தலைவருமான ராஜகண்ணப்பன் கடந்த 7-ந் தேதி, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். நேற்று காலை 10 மணிக்கு அவர், பரமன்குறிச்சி மெயின் பஜாருக்கு வந்தார். அவருக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் மேள வாத்தியங்களுடன் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்பு பஜாரில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து அவர் பிரசாரத்தை தொடங்கினார். இதில் மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன், உடன்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளரும், உடன்குடி யூனியன் சேர்மனுமான பாலசிங், உடன்குடி நகர செயலாளார் ஜாண்பாஸ்கர், மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் ராமஜெயம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ரவிராஜா, இளங்கோ, செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸ்ாப் அலி பாதுஷா, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி நகர இளைஞர் அணி அமைப்பாளர் அஜய், உடன்குடி டவுன் முன்னாள் கவுன்சிலர் சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர் உடன்குடி சந்தையடி தெருவில் கட்சிக்கொடியேற்றி வைத்து பேசினார். மேலும் உடன்குடி மெயின் பஜார் பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று அவர் ஆதரவு திரட்டினார். அவருக்கு உடன்குடி ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் வாத்தியங்களுடன், பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘
தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணிக்கு மக்களிடம் நல்ல ஆதரவு உள்ளது. ஆட்சி மாற்றத்தை தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். தி.மு.க. மீது அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு பழி சுமத்தி வருகின்றனர். தி.மு.க.வைச் சேர்ந்த யாரும் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெறவில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் ஊழலுக்காக தண்டனை பெற்றுள்ளனர். தற்போது தேர்தல் கணிப்புகள் வெளிவந்துள்ளது. அதில் தி.மு.க. கூட்டணி 56 சதவீதம் ஓட்டுக்களை பெற்று, சுமார் 200-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியால் தி.மு.க. கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது. இத்தொகுதியின் வளர்ச்சியில் அதிக அக்கரை கொண்டவர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.’ என அவர் தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உடன்குடி அருகே தண்டுபத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெபராஜ் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகபெருமாள், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பை.மு.ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தற்போது 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பணி வேகமாக நடந்துவருகிறது. இதில் வழக்கறிஞர்களுக்குதான் பணி அதிகமாக உள்ளது. தேர்தல் அறிவித்தவுடன் பிரசாரம், விளம்பரம் செய்வது, மனுதாக்கல், மனுபரிசீலனை, ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை அதிகாரபூர்வமான முடிவு அறிவிப்பு என, எல்லா காலகட்டத்திலும் வழக்கறிஞர்கள் பணி மிக மிக அதிகமாக தேவை. தி.மு.க.வில் உள்ள வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எல்லோரும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். தி.மு.க.வில் உள்ள சாதாரண தொண்டன் போன் மூலம் ஒரு பிரச்சனையை சொன்னால், நமது வழக்கறிஞர்கள் மறுநிடம் அந்த இடத்தில் இருக்க வேண்டும். கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்-அமைச்சர் ஆக்கும் வரை அயராது உழைப்போம் என்று ஒவ்வொருவரும் சபதம் ஏற்று உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர் சாத்ராக் உட்பட 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) எனது தலைமையில் உடன்குடி தண்டுபத்தில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாநில தி.மு.க. மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட அமைப்பாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். எனவே மாணவர் பிரிவின் அனைத்து ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story