திருக்குறுங்குடியில் சிறுத்தைப்புலி நடமாட்டமா? வனத்துறையினர் நேரில் ஆய்வு


திருக்குறுங்குடியில் சிறுத்தைப்புலி நடமாட்டமா? வனத்துறையினர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 10 Dec 2020 3:30 AM IST (Updated: 10 Dec 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடி பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஏர்வாடி,

நெல்லை மாவட்டம் ஏர்வாடியை அடுத்த திருக்குறுங்குடி படலையார்குளம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் அடிக்கடி காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதற்கிடையே நேற்று அந்த பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடியதாக தகவல் பரவியது. இதன் அடையாளமாக அங்கு மண்ணில் கால்தடங்கள் பதிந்திருந்தன.

இதுபற்றி களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்தனர். இதில், அது சிறுத்தையின் கால்தடங்கள் அல்ல என்பது கண்டறியப்பட்டது. எனினும் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என்றும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு விஜயநாராயணம் ஏழாங்கால் பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் சிறுத்தைப்புலி தனது குட்டியுடன் நடந்து சென்றதை அப்பகுதி விவசாயிகள் நேரில் பார்த்ததாக கூறினர். அதன்பேரில் வனத்துறையினரும் அங்கேயே முகாமிட்டு சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருக்குறுங்குடி பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடியதாக பரவிய தகவல் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story