மாவட்டத்தில் திருட்டு போன ரூ.13 லட்சம் மதிப்பிலான 114 செல்போன்கள் மீட்பு - போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்


மாவட்டத்தில் திருட்டு போன ரூ.13 லட்சம் மதிப்பிலான 114 செல்போன்கள் மீட்பு - போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்
x
தினத்தந்தி 10 Dec 2020 3:30 AM IST (Updated: 10 Dec 2020 3:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.13 லட்சம் மதிப்பிலான 114 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஒப்படைத்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்படி, சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார் அடங்கிய குழுவினர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இணையதள வழி குற்றப்பிரிவுக்கு சென்று பயிற்சி பெற்றனர். அதன்பிறகு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இணையதள வழி குற்றப்பிரிவு தொடங்கப்பட்டது.

தற்போது அந்த குற்றப்பிரிவில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகள் மற்றும் 3 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இதுவரையில் இணையவழி மூலம் 83 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இதுதவிர போலீசார் மூலம் நடத்தப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 53 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் செல்போன்களை தவறவிட்டவர்கள், திருட்டு போன செல்போன்கள், செல்போன்களை வழிப்பறியில் பறிகொடுத்தவர்கள், மாயமான செல்போன்கள் உள்பட 526 புகார் மனுக்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில் மாயமான, திருட்டு போன, வழிப்பறியில் பறிகொடுத்த 114 செல்போன்கள் மீட்கப்பட்டன. அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்ட சைபர் கிரைம் மூலம் மீட்கப்பட்ட 50 செல்போன்கள் ஏற்கனவே உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது 114 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூபாய் 13 லட்சத்து 8 ஆயிரத்து 797 ஆகும். ஏற்கனவே பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி செல்போன்களை மீட்டனர். மீதம் உள்ள செல்போன்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 117 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. சுமார் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் கைவசம் உள்ளன. அந்த கேமராக்களை பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தேவைப்பட்டால் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இதன்மூலம் குற்ற நிகழ்வு நடந்தால் குற்றவாளிகளை எளிதில் பிடிக்கலாம். மணல் கடத்தல் தொடர்பாக பலரை இதுவரை கைது செய்துள்ளோம். இதுதொடர்பாக பொதுமக்கள் தகவல் கொடுத்தால் போலீசார் கண்காணிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பாராவ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story