பூண்டி ஏரியில் ‘செல்பி’ எடுக்க முயன்றபோது படகு கவிழ்ந்து 3 வாலிபர்கள் நீரில் மூழ்கினர் - தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்
பூண்டி ஏரியில் ‘செல்பி’ எடுக்க முயன்றபோது, படகு கவிழ்ந்து 3 வாலிபர்கள் நீரில் மூழ்கினர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் 3 கி.மீ. சென்று உயிருடன் மீட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் பெரியகுப்பம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகன் குணா (வயது 20). குணா தனது நண்பர்களான திருவள்ளூரை அடுத்த மணவாளநகரை சேர்ந்த பிரபு (20), திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (21) உள்பட 5 பேர் நேற்று திருவள்ளூர் அடுத்த பூண்டி அருகே உள்ள சதுரங்க பேட்டையில் படகு நிறுத்தும் இடம் அருகே சென்றனர்.
அப்போது ஐந்து பேரில் குணா, பிரபு, வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் அங்கிருந்த சீனிவாசன் என்பவரின் படகை எடுத்துக் கொண்டு பூண்டி ஏரியில் நடுப்பகுதிக்கு ‘செல்பி’ எடுக்க சென்றனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் பெரிய அலை அடித்து குணா, பிரபு, வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் ஏரியில் மூழ்கினார்கள். இதைக்கண்ட கரையில் இருந்த இரண்டு நண்பர்களும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறி கூச்சலிட்டனர்.
இதை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நீரில் மூழ்கி தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரியில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை. இதுபற்றி புல்லரம்பாக்கம் போலீசார் மற்றும் திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு புல்லரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் உள்ளிட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அப்போது தீயணைப்பு துறையினர் தாங்கள் கொண்டு வந்த மிதக்கும் படகு மூலம் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரையும், பத்திரமாக உயிருடன் மீட்டனர். அப்போது அங்கு தயாராக வந்து நின்ற 108 ஆம்புலன்சில் இருந்த ஊழியர்கள் மேற்கண்ட 3 பேருக்கும் அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Related Tags :
Next Story