கொரோனாவால் மூடப்பட்ட அஜந்தா குகைகள் 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு


கொரோனாவால் மூடப்பட்ட அஜந்தா குகைகள் 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 10 Dec 2020 4:00 AM IST (Updated: 10 Dec 2020 6:26 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோய் தொற்றால் மூடப்பட்ட அஜந்தா குகைகள் 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டு உள்ளது.

அவுரங்காபாத்,

அவுரங்காபத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்த சகாயத்திரி மலைத் தொடரில் அஜந்தா குகைகள் அமைந்துள்ளது. இங்குள்ள நம்ப முடியாத கலை நயத்துடன் வரையப்பட்ட ஓவியங்கள், செதுக்கப்பட் சிற்பங்கள் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்த சிற்பங்கள் எல்லாம் உறுதியான பாறையில் கி.மு. 2-ம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. 7-ம் நூற்றாண்டு வரையான காலத்தில் செதுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

அஜந்தா குகை சிற்பங்கள் எனப் போற்றப்படும் இவை 1983-ம் ஆண்டில் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டது. இதனை காண நாடு முழுவதும் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவது வழக்கம்.

ஆனால் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் அஜந்தா குகைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சற்று சீராகி வருவதை தொடர்ந்து இந்த குகைகளுக்கு செல்ல மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதை ஏற்றுக்கொண்ட அரசு 9 மாதங்களுக்கு பிறகு அஜந்தா குகைகளை மீண்டும் திறந்துள்ளது. இருப்பினும் ஆன்லைன் மூலமாக முறையாக முன்பதிவு செய்த பிறகே சுற்றுலா பயணிகள் குகைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுலாவரும் பயணிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல அஜந்தா குகைகளை சுற்றியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என மந்திரி அப்துல் சத்தார் தெரிவித்துள்ளார்.

Next Story