தொட்டியம் அருகே சாலை வசதி கேட்டு நாற்று நடும் போராட்டம்


தொட்டியம் அருகே சாலை வசதி கேட்டு நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2020 7:06 AM IST (Updated: 10 Dec 2020 7:06 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் அருகே சாலை வசதி கேட்டு பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரசலூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருவிளக்கு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி செய்து தரவில்லை.

இதனால், மழை காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும்-சகதியுமாக காட்சியளிப்பது வழக்கம். அந்தவகையில், தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் இப்பகுதியில் உள்ள சாலை சேறும்-சகதியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்லக்கூட முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாற்று நடும் போராட்டம்

இப்பகுதியில் தார்சாலை வசதி செய்து தர வேண்டும், அதுவரை தற்காலிகமாக சேறும்-சகதியுமான சாலையில் மண்ணை கொட்டி சமப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அதிருப்தி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சேறும்-சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அரசலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சஞ்சீவி மற்றும் தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் உங்களது கோரிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story