தொடர்மழையால் சமுத்திரம் ஏரி நிரம்பி வழிகிறது: பொதுமக்கள் நடந்து செல்வதற்காக தற்காலிக தரைப்பாலம் அமைப்பு


தொடர்மழையால் சமுத்திரம் ஏரி நிரம்பி வழிகிறது: பொதுமக்கள் நடந்து செல்வதற்காக தற்காலிக தரைப்பாலம் அமைப்பு
x
தினத்தந்தி 10 Dec 2020 7:49 AM IST (Updated: 10 Dec 2020 7:49 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழையால் சமுத்திரம் ஏரி நிரம்பி வழிகிறது. இதையடுத்து அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்வதற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் பகுதியில் உள்ளது சமுத்திரம் ஏரி. இந்த ஏரி மன்னர்கள் காலத்தில் 242 ஏக்கர் பரப்பளவில் வெட்டப்பட்டது. இந்த ஏரி கடல்போல காட்சி அளிக்கும். இந்த நிலையில் புரெவி புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பெய்த தொடர்மழை காரணமாக இந்த ஏரி நிரம்பி வழிகிறது.

இந்த ஏரியில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் பாசன வாய்க்கால் வழியாக சென்று வடவாற்றில் கலக்கும். நிரம்பி வழியும் பகுதி தஞ்சை மாநகராட்சி 36-வது வார்டில் உள்ள சாலக்காரத்தெரு பகுதியாகும். இந்த சாலக்காரத்தெரு சருக்கை பகுதியில் ரூ.6½ கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

தரைப்பாலம் அமைக்க கோரிக்கை

தற்போது மழை பெய்து வருவதால் பாலப்பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெறவில்லை. இந்த நிலையில் ஏரி நிரம்பி வருவதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தஞ்சைக்கு வருவதற்கும், மாரியம்மன்கோவில் பகுதிக்கு செல்வதற்கும் ஏரியை கடந்து செல்ல சிரமப்பட்டனர். அவர்கள் தண்ணீரில் நடந்து சென்று வந்தனர். எனவே இந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து வைத்திலிங்கம் எம்.பி. கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக தற்காலிகமாக தண்ணீர் செல்வதற்கு ராட்சத குழாய்கள் அமைத்து தரைப்பாலம் அமைக்குமாறு மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரனை கேட்டுக்கொண்டார். அதன் பேரில் பொக்லின் எந்திரம் வரவழைக்கப்பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மாநகராட்சி உதவி பொறியாளர் சித்ரா, கீழவாசல் பகுதி அ.தி.மு.க. செயலாளர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணிகள் நேற்று நடைபெற்றது. உடனடியாக தரைப்பாலம் அமைத்து கொடுத்ததற்கு அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story