தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் கடலூரில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி


தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் கடலூரில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2020 8:58 AM IST (Updated: 10 Dec 2020 8:58 AM IST)
t-max-icont-min-icon

புயல், மழை வெள்ளத்தால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

கடலூர்,

கடந்த 2000-ம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டத்தில் 9 முறை வெள்ளம், புயல் பாதிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதை பெயரளவுக்கு அமைச்சர்கள் பார்வையிடுவதும், நிவாரணம் வழங்குவதுமாக இருக்கிறார்கள். ஆனால், தொலைநோக்கு பார்வையிலான திட்டங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை. கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக அதிக மழை பெய்துள்ளது. இருப்பினும் போதிய வடிகால்கள் வசதி இல்லாமல் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது கொள்ளிடம் ஆற்றில் 7 இடங்களில் கதவணைகள் கட்ட வலியுறுத்தினோம். ஆனால், ஆதனூர்-குமாரமங்கலம் இடையே மட்டும் ஒரு கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற கதவணைகளையும் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்

வீராணம் ஏரி வெட்டும் போது 1.65 டி.எம்.சி. நீர் பிடித்தம் செய்யும் அளவுக்கு இருந்தது. தற்போது, ஏரியில் 0.852 டி.எம்.சி. மட்டுமே தண்ணீரை தேக்க முடிகிறது. வண்டல் மண் படிவதால் நீர்மட்டம் குறைந்து விட்டது. ஆகவே, வீராணம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளையும் தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். அருவாமூக்கு திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் சுமார் 1½ லட்சம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. வாழை, மணிலா, பன்னீர் கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் சேதமடைந்து உள்ளன. இதனை முறையாக மதிப்பீடு செய்து கணக்கு எடுக்க வேண்டும். தற்போது நெற்பயிர்கள் பார்ப்பதற்கு பச்சை பசேலென தெரிந்தாலும் விளைந்தால் அவை பதராகத்தான் இருக்கும். எனவே, நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், வாழைக்கு ரூ.50 ஆயிரமும், மற்ற சேதமடைந்த பயிர்களுக்கு ஏற்றவாறு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும்.

முழுமையாக வழங்க வேண்டும்

2015-ம் ஆண்டு பெய்த மழை வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு ரூ.22 ஆயிரம் கோடி கேட்டது. ஆனால், மத்திய அரசு சுமார் ரூ.500 கோடி மட்டுமே வழங்கியது. மாநில அரசு மதிப்பீடு செய்து மத்திய அரசிடம் கேட்கும் நிதியில் 10 சதவீதம் மட்டுமே வழங்குகிறது. பின்னர் எதற்காக மத்தியக்குழுவை அரசு அனுப்பி வைக்க வேண்டும். எனவே, புயல், மழை பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்.

வீடு இடிந்தால் மட்டுமே நிவாரணம் என்று சொல்லாமல், தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டாலே தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். சென்னை-சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதேபோல் சென்னை- திருவள்ளூர்- பெங்களூரு சாலைக்காக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த இரு திட்டங்களையும் அரசு கைவிட வேண்டும். விவசாயத்தை அழித்து விட்டு வளர்ச்சி தேவைப்படுகிறதா?

கூட்டணி

நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் போது புதுடெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காஷ்மீரில் உள்ள தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்திருப்பது மத்திய அரசின் அராஜகத்தின் உச்ச கட்டமாகும். ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைத்து விட்டு பெரிய அளவிலான நாடாளுமன்ற கட்டிடம் தேவையா?

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்று மத்திய அரசு கூறி விட்டதால் இப்போராட்டம் நீடித்துக் கொண்டே செல்லலாம். அதேநேரத்தில் இந்த சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளனர். மத்திய அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற்றாலும் தமிழகத்தில் இச்சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலை உள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளின் நலனை அ.தி.மு.க. கண்டுக்கொள்ளவில்லை.

நாடகம்

தமிழகத்தில் தற்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. சாதி வாரியான புள்ளி விவரங்கள் வேண்டுமெனில் மத்திய அரசு 2011-ம் ஆண்டு எடுத்த புள்ளி விவரங்களை கோரி பெற்றுக் கொள்ளலாம். புதிதாக கணக்கெடுப்பு தேவையில்லை. கணக்கெடுப்பு என்ற பெயரில் அரசியல் நாடகத்தை நடத்துவதற்காக, பா.ம.க.வை சமரசப்படுத்துவதற்கான அறிவிப்பு தான் இது. மக்களை ஏமாற்றுவதற்கான நாடகமே தவிர மற்ற எதுவும் இல்லை.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆறுமுகம், நிர்வாகிகள் மருதவாணன், கருப்பையன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story