வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ரெயில் மறியலுக்கு முயற்சி 35 பேர் கைது
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண்சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, அரசியல் கட்சியினரும், பல்வேறு விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நேற்று காலை திருப்பூர் ரெயில் நிலையம் முன்பு நடைபெற்றது. போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அங்க குமார் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் விடுதலை செல்வன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் தமிழினியன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் முத்துக்குமார், சுயமரியாதை மாணவர் கழகத்தின் அறிவரசு மற்றும் மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம், தலித் விடுதலைக் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏர் கலப்பையை கையில் ஏந்தியபடி திருப்பூர் ரெயில் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது அங்கு வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதில் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் மறியலுக்கு முயன்றதாக 2 பெண்கள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story