ஆரணி பகுதியில் மழை சேதப்பகுதிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு


ஆரணி பகுதியில் மழை சேதப்பகுதிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு
x
தினத்தந்தி 10 Dec 2020 5:25 PM IST (Updated: 10 Dec 2020 5:25 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி பகுதியில் மழை சேதப்பகுதிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

ஆரணி, 

ஆரணி நகரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆரணி பகுதியில் பெரும்பாலான வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சைதாப்பேட்டையில் சீதாராமன் தெருவில் உள்ள ரேணுகாம்பாள் என்பவருடைய ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று, ரேணுகாம்பாளுக்கு, நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார். உடனடியாக பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

தொடர்ந்து குண்ணத்தூர் கொண்டம் ஆற்றுப்பகுதியிலிருந்து சேவூர் ஏரிக்கு வரக்கூடிய கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. அதையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வி.மூர்த்தி, ஒன்றிய பொறியாளர்கள் குருபிரசாத், மதுசூதனன், பணி மேற்பார்வையாளர் சுஜாதா ஆகியோரும் உடனிருந்தனர். அங்கு சிறு பாலம் அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். வெட்டியாந்தொழுவம் கிராமத்திலிருந்து, பூசிமலைகுப்பம் செல்லும் சாலையை ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தி, தார் சாலை அமைக்கும் பணியையும், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளியுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆரணி ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், சேவூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏ.கே.குமரவேல், நகர செயலாளர் அசோக்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எஸ்.ஜோதிலிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சாமுண்டீஸ்வரி சுரேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story