மாவட்ட செய்திகள்

வேலூர் அருகே பயங்கரம்: புழல் ஜெயில் வார்டன் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை ரவுடி உள்பட 7 பேர் கைது + "||" + Near Vellore Including the whirlwind jail warden 3 people were stabbed to death 7 people including Rowdy were arrested

வேலூர் அருகே பயங்கரம்: புழல் ஜெயில் வார்டன் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை ரவுடி உள்பட 7 பேர் கைது

வேலூர் அருகே பயங்கரம்: புழல் ஜெயில் வார்டன் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை ரவுடி உள்பட 7 பேர் கைது
வேலூர் அருகே புழல் ஜெயில் வார்டன் உள்பட 3 பேரை வெட்டிக் கொலை செய்த ரவுடி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
வேலூர், 

வேலூர் அருகே உள்ள அரியூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராமன் மகன் காமேஷ் (வயது 29). இவர் நேற்று முன்தினம் இரவு அவருடைய நண்பர் பிரவீன்குமாருடன் மோட்டார் சைக்கிளில் அரியூர் ராஜாபாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காரில் வந்த 7 பேர் கொண்ட மர்மகும்பல் அவர்களை வழிமறித்தனர். அந்த கும்பல் திடீரென காமேசை அரிவாளால் வெட்ட முயன்றனர். அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மர்மகும்பல் விரட்டி சென்று காமேசை ஓட, ஓட சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை சாலையோரம் வீசிவிட்டு மர்மகும்பல் காரில் தப்பி சென்றனர். இதில், பிரவீன்குமாருக்கும் வெட்டு விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரையும் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காமேசை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பிரவீன்குமாருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர், ரவுடி ராஜா என்கிற எம்.எல்.ஏ. ராஜா உள்ளிட்ட 7 பேர் கொண்ட மர்மகும்பல் காமேசை வெட்டி விட்டு காரில் தப்பி சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

சிறிதுநேரத்தில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அவரின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். வேலூர் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளான கிறிஸ்டியான்பேட்டை, பத்தரப்பள்ளி, சைனகுண்டா, கண்ணமங்கலம் கூட்ரோடு உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. வேலூர் மாநகர பகுதிகளில் இரவு நேர ரோந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

வேலூர் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் பாகாயம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரவுடி ராஜா உள்பட 7 பேர் இருந்தனர். அவர்களை உடனடியாக போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் 7 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அவர்கள் அரியூரை சேர்ந்த ராஜா (37), ரோகித்குமார் (31), சேம்பர்ராஜா (37), சிறுகாஞ்சி உமாமகேஸ்வரன் (29), வெள்ளிக்கடை லோகேஷ் (22), கண்டிபேடு ஆனந்த் (24), சின்னசேக்கனூர் சுனில் (34) என்று தெரிய வந்தது. மேலும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. காமேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் அரியூர் முருக்கேரியை சேர்ந்த தனியார் மருத்துவமனை ஊழியர் திவாகர் (25), சென்னை புழல் ஜெயிலில் வார்டன் தணிகைவேல் (26) ஆகியோர் சேர்ந்து தோட்டப்பாளையத்தை சேர்ந்த நண்பன் அசோக்கின் கொலைக்கு பழிவாங்க ராஜாவை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். இதனை அறிந்த ராஜாவிற்கு தன்னை காமேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் கொலை செய்து விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டது.

அதனால் நேற்று முன்தினம் இரவு ராஜா சமாதான பேச்சு வார்த்தைக்காக தணிகைவேல், திவாகர் ஆகியோரை புலிமேடு பகுதிக்கு வரும்படி கூறி உள்ளார். அதன்பேரில் 2 பேரும் அங்கு சென்றுள்ளனர். அங்குள்ள விவசாய நிலத்தில் தணிகைவேல், திவாகர் மற்றும் ராஜா அவருடைய கூட்டாளிகள் 6 பேர் மதுஅருந்தி உள்ளனர். அப்போது காமேசை அங்கு வரும்படி செல்போனில் தணிகைவேல் அழைத்துள்ளார். அதற்கு காமேஷ் சிறிதுநேரத்தில் வருவதாக தெரிவித்துள்ளார். மதுஅருந்தும்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரம் அடைந்த ராஜா மற்றும் கூட்டாளிகள் திவாகர், தணிகைவேல் ஆகியோரின் வாயை துண்டால் கட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அதன்பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த காமேசை வெட்டி சாய்த்தோம் என்று தெரிவித்துள்ளனர்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் புலிமேடு கிராமத்துக்கு சென்றனர். அங்குள்ள விவசாய நிலத்தில் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் திவாகர், தணிகைவேல் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி மற்றும் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொலை குறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிந்து ராஜா உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.

வேலூர் அருகே ஜெயில் வார்டன் உள்பட 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘வாட்ஸ்-அப்’பில் மிரட்டல்

ஈரோட்டில் துணி வியாபாரம் செய்து வந்த ரவுடி ராஜாவின் செல்போன் வாட்ஸ்-அப்பிற்கு திவாகர் செய்தி அனுப்பி உள்ளார். அதில், ‘ராஜா உன்னை சுடுகாடு அழைக்கிறது. விரைவில் வரவும்’ என்று மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் புழல் சிறையில் வார்டனாக பணியாற்றிய தணிகைவேல் கூலிப்படையை வைத்து ராஜாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனை தனது கூட்டாளிகள் மூலம் அறிந்த ராஜா கூலிப்படையை வைத்து தன்னை கொலை செய்து விடுவார்கள் என்று சமாதானம் பேச அழைத்து 2 பேரையும் வெட்டி கொன்றுள்ளார்.

சாலையோரம் கிடந்த 7 அரிவாள்கள்

காமேஷ், தணிகைவேல், திவாகர் ஆகியோரை கொலை செய்த ராஜா உள்பட 7 பேர் வந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். 7 பேரையும் கைது செய்து, அந்த காரை பறிமுதல் செய்தனர். அதில், கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளதா? என்று போலீசார் சோதனையிட்டனர். ஆனால் காரில் எந்த ஆயுதமும் கிடைக்கவில்லை.

போலீசார் விசாரணையில், காமேசை வெட்டிய பின்னர் அவர்கள் வேலூருக்கு வரும் வழியில் சாலையோரம் அரிவாளை வீசி விட்டு வந்தது தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் அரியூர்-ஊசூர் சாலையோரம் தேடிப்பார்த்தனர். அப்போது சாலையோரம் ரத்தம் படிந்த 7 அரிவாள்கள் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

சித்ரவதை செய்து கொலை

புலிமேட்டில் விவசாய நிலத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்த திவாகர், தணிகைவேல் ஆகியோரின் வாய் துண்டால் கட்டப்பட்டிருந்தன. 2 பேரையும் கொலை கும்பல் வாயை கட்டி சித்ரவதை செய்து, அதன்பின்னர் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். சமாதானம் பேச அழைத்து 2 பேரையும் கடத்தி சென்று சித்ரவதை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் அருகே சொத்துகளை பறித்துக்கொண்டு விரட்டியடித்த மகன்கள் மீட்டுத்தரும்படி மாவட்ட வருவாய் அலுவலரிடம் முதியவர் மனு
வீடு, சொத்தை பறித்து விட்டு மகன்கள் விரட்டியடித்து விட்டனர். அதனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம், முதியவர் ஒருவர் கண்ணீருடன் மனு அளித்தார்.
2. வேலூர் அருகே விமான நிலைய விரிவாக்க பணிகளை கதிர்ஆனந்த் எம்.பி. ஆய்வு
வேலூர் அருகே விமான நிலைய விரிவாக்க பணிகளை கதிர்ஆனந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.