முதல்-அமைச்சர் அறிவித்தபடி விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உறுதி
விருதுநகரில் முதல்-அமைச்சர் அறிவித்தபடி பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உறுதியளித்தார்.
விருதுநகர்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்ததுடன் அதற்காக முதல் கட்டமாக ரூ.50 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார். இந்தநிலையில் பொது மருத்துவ கல்லூரி இல்லாத நிலையில் பல் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்க இயலாது என இந்திய மருத்துவ குழும தெரிவித்தது.
இதனால் விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது விருதுநகரில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு ரூ.390 கோடி மதிப்பீட்டில் பொது மருத்துவக்கல்லூரி மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
வரும் கல்வி ஆண்டில் இருந்து மருத்துவக்கல்லூரியில் முதல் கட்டமாக 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். பொது மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட உள்ள நிலையில் இந்திய மருத்துவக்குழு விதிமுறைப்படி இதனுடன் இணைந்து பல் மருத்துவ தொழில் தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
ஏற்கனவே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தென் மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகரில் மருத்துவக்குழுமத்தின் விதிமுறைப்படி மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆதலால் பொது மருத்துவக்கல்லூரியுடன் இணைந்து பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்த பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் களத்தில் இறங்கி மக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகிறார். ஆதலால் அவர் தான் அடுத்த முதல்-அமைச்சராக வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், ஜெயலலிதாவை பற்றியும் அவதூறாக பேசியவர்கள் மீது தலைமையின் ஒப்புதல் கிடைத்தவுடன் அவர்கள் மீது வழக்கு தொடர உள்ளேன். நாட்டு மக்களின் தேவை அறிந்து மு.க.ஸ்டாலின் பேசுவது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது சந்திரபிரபா எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
Related Tags :
Next Story