மாவட்ட விவசாயத்துறைக்கு ரூ.4,609 கோடி கடன் வழங்க ஒதுக்கீடு - திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் தகவல்


மாவட்ட விவசாயத்துறைக்கு ரூ.4,609 கோடி கடன் வழங்க ஒதுக்கீடு - திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 10 Dec 2020 8:28 PM IST (Updated: 10 Dec 2020 8:28 PM IST)
t-max-icont-min-icon

2021-22-ம் நிதியாண்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயத்துறைக்கு ரூ.4,609 கோடி கடன் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று திட்ட அறிக்கையை வெளியிட்டு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது. இதில், 2021-22-ம் நிதியாண்டின் வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார். கூட்டத்தில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உதவி மேலாளர் தாமோதரன், இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் வெங்கடசுப்பு, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் நஸ்ரின் சலீம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், தாட்கோ மேலாளர் யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் முன்னுரிமை துறையின் கீழ் ரூ.7,035 கோடி அளவுக்கு வங்கிகளால் கடன் அளிக்க முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு 2020-21-ம் ஆண்டிற்கான திட்ட மதிப்பீட்டை விட 8 சதவீதம் அதிகம். அரசு துறைகள், வங்கிகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து, இந்த திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி ஒரு விவசாய மாவட்டமாக இருப்பதால், மொத்த மதிப்பீடான ரூ.7,035 கோடி திட்டத்தில், விவசாய துறைக்கு ரூ.4,609.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கடனுக்கு ரூ.1,083.16 கோடியும், ஏற்றுமதிக்கு ரூ.96 கோடியும், கல்விக்கு ரூ.105.53 கோடியும், வீட்டு வசதிக்கு ரூ.132.75 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சமூக உள்கட்டமைப்புக்கு ரூ.52.50 கோடியும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ரூ.18.39 கோடியும், சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள் மற்றும் பி.எம்.ஜே.டி.ஒய். கீழ் ஓவர் டிராப்ட்க்கு ரூ.938.55 கோடியும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வங்கிகள் அனைத்து துறைகளிலும் குறிப்பாக ஏழை எளியோருக்களுக்கு தேவையான கடன்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story