வேளாண் சட்டத்தை கண்டித்து கோவை மாவட்டத்தில் 2-வது நாளாக மறியல் போராட்டம் - எம்.பி. உள்பட 556 பேர் கைது


வேளாண் சட்டத்தை கண்டித்து கோவை மாவட்டத்தில் 2-வது நாளாக மறியல் போராட்டம் - எம்.பி. உள்பட 556 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2020 9:48 PM IST (Updated: 10 Dec 2020 9:48 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டத்துக்கு எதிராக கோவை மாவட்டத்தில் 2-வது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. பி.ஆர். நடராஜன் எம்.பி. உள்பட 556 பேர் கைதானார்கள்

கோவை,

மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் சட்ட திருத்தத்தை கண்டித்து டெல்லியில் 14 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கோவை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. சுல்தான்பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், சுல்தான்பேட்டை பஸ்நிறுத்தம் அருகே சாலைமறியல் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பி.ஆர்.நடராஜன் எம்.பி., தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி, கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் தர்மராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு மண்டல இளைஞரணி செயலாளர் காமநாயக்கன்பாளையம் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் கிரி, விவசாய சங்க நிர்வாகிகள் செல்வராஜ், பழனிசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சுல்தான் பேட்டை தாலுகாகுழு உறுப்பினர் திருமலைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்களை சுல்தான்பேட்டை போலீசார் கைது செய்து, பச்சார்பாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைத்தனர். இதில் எம்.பி. உள்பட 276 பேர் கைது செய்யப்பட்டனர்.

சூலூர் தாலுகா பாப்பம்பட்டி பிரிவில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகா செயலாளர் வசந்தகுமார், ஆகியோர் தலைமை தாங்கினர். வேளாண் சட்டத்தை திரும்பபெற வேண்டும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுவதை மோடி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். திடீரென்று சிலர் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மேட்டுப்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மீண்டும் நீலகிரி மலை ரயிலை இயக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதிகா ஆகியோர் தலைமை தாங்கினர். சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெருமாள் ராஜலட்சுமி கனகராஜ் தாலுகா செயலாளர் சிராஜூன், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் பால மூர்த்தி சண்முகசுந்தரம்,மயில்சாமி, பழனிசாமி, மகபுநிஷா உள்பட 160 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் வாகனம் மூலம் தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 556 பேர் கைதானார்கள். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story