தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களே அங்கீகாரம் பெற்றவை: திரைப்படத்துறையினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களே அங்கீகாரம் பெற்றவை: திரைப்படத்துறையினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 11 Dec 2020 3:30 AM IST (Updated: 10 Dec 2020 10:52 PM IST)
t-max-icont-min-icon

திரைப்படத்துறையினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டி,

மூதறிஞர் ராஜாஜியின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு உள்ள அவரது சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், சின்னப்பன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சந்திரசேகர், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் திரைப்படத்துறை கடல் போன்றது. இதில் தங்களது வசதிகளுக்கு ஏற்ப அமைப்புகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் என்று எந்த சங்கமாக இருந்தாலும் ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்கள்தான் ஆங்கீகாரம் பெற்ற சங்கங்களாக இருக்க முடியும்.

திரைப்படத்துறையினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் அரசின் கருத்து. இதுகுறித்து பலமுறை நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம். இதற்கான முயற்சியில் திரைப்படத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். தமிழ் திரையுலகில் விரைவில் அனைவரும் ஒன்றாக செயல்படும் சூழ்நிலை வரும்.

தமிழகத்துக்கு எந்த திட்டங்கள் வந்தாலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தடைக்கல்லாக இருக்கிறார். அவர் படிக்கல்லாக இருக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியின்போது செய்யாத பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். இதனை பாராட்ட வேண்டும். சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்து உள்ளது. 8 வழிச்சாலை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று உள்ளது. இந்த சாலை விவகாரத்தை சிலர் அரசியலுக்காக தூண்டி விடுகின்றனர்.

8 வழிச்சாலை திட்டத்தால் மக்கள் பாதிக்கப்படவில்லை. இந்த திட்டம் மத்திய அரசு வழங்கிய அற்புதமான திட்டம். இந்த திட்டத்தால் போக்குவரத்து விரிவடையும். வணிக தொடர்பு அதிகரிக்கும். தமிழகம் வளர்ச்சி பெறும். வடமாநிலங்களில் 8 வழிச்சாலை, 10 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக தூண்டி விடுபவர்களை சிலர் நம்பலாம், மக்கள் நம்ப மாட்டார்கள்.

கனிமொழி எம்.பி. உள்ளிட்ட தி.மு.க.வினர் மடியில் கனம் இருப்பதால் பயப்படுகின்றனர். 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. தலைவர் கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. குற்றச்சாட்டுகள் கூறுவது எளிது. அதற்கு ஆதாரம் வேண்டும். தி.மு.க.வை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம் அ.தி.மு.க.வுக்கு கிடையாது. தி.மு.க. தலைவர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அ.தி.மு.க. பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டால் அனைவரும் சிறையில் இருப்பார்கள்.

2021-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுத்தால் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்ற பயத்தில் தான் அ.தி.மு.க.வினரை சிறைக்கு அனுப்புவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். இதற்கு காலம் பதில் சொல்லும். தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு, நில அபகரிப்பு எப்படி இருந்தது என்பது குறித்து மக்களுக்கு தெரியும். தி.மு.க.வினர் மண்டல வாரியாக வாரிசுகளை வைத்து ஆட்சி நடத்தினர். ஆனால் அ.தி.மு.க.வில் அதுபோன்ற நிலை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-6 பகுதியில் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை, வடிகால் அமைத்தல், வார்டு எண்-15-ல் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை, வடிகால் அமைத்தல், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையம் மற்றும் குமாரபுரம் காலனி தெருவில் அமைக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகியவற்றை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

மேலும் மூலதன மானிய திட்டம் 2019- 2020-ல் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் வல்லாரை வென்றான் கண்மாயில் திறந்தவெளி கிணறு அமைத்து, அக்கிணற்றில் இருந்து ஆறுமுகநகர், கழுகாசலமூர்த்தி நகரில் புதிதாக கட்டப்பட்ட ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, பம்ப் ரூம் மூலம் கழுகுமலை பேரூராட்சிக்குஉட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இதுதவிர இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி 2020-2021-ன் கீழ் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் குமாரபுரத்தில் சுமார் 600 மீட்டர் தொலைவுக்கு சாலை வசதி மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், ஊராட்சிக்குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், உதவி பொறியாளர் அன்னம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story