“தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டு உள்ளது” - ராஜகண்ணப்பன் குற்றச்சாட்டு
“தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டு உள்ளது“ என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம் சாட்டினார்.
உடன்குடி,
தி.மு.க. சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்‘ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி, குலசேகரன்பட்டினம் பகுதியில் நடந்த பரப்புரை கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு இணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களால் பணம் படைத்த தொழில் அதிபர்கள்தான் பயன்பெறுவார்கள்.
மாநில அரசு மக்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் கொரோனா நிவாரணத்திலும் ஊழல் செய்கிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருப்பதன் பின்னணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளது.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிரான மத்திய, மாநில அரசுகளை தி.மு.க. மட்டுமே துணிவுடன் எதிர்த்து போராடுகிறது. மத ரீதியாக மக்களை பிரிக்கும் பா.ஜனதா அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது. எனவே மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு முழுமையான ஆதரவை தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள விண்ணவரம் பெருமாள் சுவாமி கோவில், முத்தாரம்மன் கோவில், செய்யது சிராஜீதீன் தர்கா ஆகியவற்றில் நடைபெற்ற வழிபாட்டில் கட்சி பிரமுகர்களுடன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜனகர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன், பூபதி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவி மீரா சிராஜூதீன், நகர தி.மு.க. செயலாளர் ஜான்பாஸ்கர், செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story