மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, கரூர் இரட்டை வாய்க்கால் தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து சென்ற அதிகாரிகள்
மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் (நீதித்துறை), மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கரூர் மாவட்டத்தில் சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப் படுகிறது. இந்த கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது.
அதுமட்டுமல்லாமல் கரூரில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களால் இந்த ஆறு அழிக்கப்பட்டு வருகிறது. அமராவதி ஆறு 282 கிலோமீட்டர் தூரம் கொண்டது. திருப்பூர், கரூர் வழியாக செல்கிறது.
இந்த மாவட்டங்களில் உள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவன கழிவுகளை ஆற்றுக்குள் கலந்து விடுகின்றனர். இதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று கூறப்பட்டு இருந்தது. ஏற்கனவே இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, ஆறுகளை மாசுபடுத்துபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யக்கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். பின்னர் அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக கரூர் கலெக்டர், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பதில் மனுதாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்றுமுன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அமராவதி ஆற்றின் அருகில் உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீரின் மாதிரிகள் எடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை கிங்ஸ் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி, அதன் முடிவுகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் சேலம் மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன், கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் ஜெயக்குமார், கரூர் நகராட்சி உதவி பொறியாளர் கார்த்திக் உள்பட அதிகாரிகள் நேற்று இரட்டை வாய்க்கால் பகுதிகளான சின்னாண்டாங்கோவில், லைட்ஹவுஸ், காமராஜ் மார்க்கெட், ரெத்தினம் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று, இரட்டை வாய்க்கால் தண்ணீரின் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story