விருதுநகர்-சாத்தூர் இடையே சிப்காட் தொழில் பூங்கா திட்டப்பணி முடங்கியுள்ள நிலை; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விருதுநகர்-சாத்தூர் இடையே சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் திட்டப்பணி நிலம் கையகப்படுத்தும் நிலையிலேயே முடங்கியுள்ளதால் திட்டம் பயன்பாட்டிற்கு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொழில் பூங்கா
விருதுநகர் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விருதுநகர்-சாத்தூர் இடையே சிப்காட் தொழில் பூங்காவிற்கு நிலம் கையகப்படுத்த சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
2,000 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்ட நிலையில் தமிழக அரசின் தொழில்துறை, தொழில் பூங்கா அமைப்பதற்கான நிலப்பரப்பை 1,500 ஏக்கராக குறைத்தது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் தமிழகத்தின் தொழில்துறை, தொழில் பூங்கா அமைப்பதற்கான புதிய கொள்கையை அறிவித்தது. அதன்படி தனியார் பங்களிப்புடன் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சிப்காட் தொழில்பூங்கா அமைக்கும் பணி நிலம் கையகப்படுத்தும் நிலையிலேயே முடங்கிவிட்டது. நிலம் கையகப்படுத்த நியமிக்கப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மட்டும் தொடர்ந்து பணியில் உள்ளனர்.
ஏன்?
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் விருதுநகர்-சாத்தூர் இடையே பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அத்திட்டம் கைவிடப்பட்டது. அதன்பின்னர் தொழில் முதலீட்டு மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் மாநில அரசு ஒப்புதல் அளிக்காததால் அந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிப்காட் தொழிற்பூங்கா திட்டமும் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் இம்மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் படித்த இளைஞர்கள் வேதனையில் உள்ளனர்.
சமீபத்தில் விருதுநகருக்கு ஆய்விற்காக வந்திருந்த முதல்-அமைச்சர் சிப்காட் தொழில் பூங்கா திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ள போதிலும் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இம்மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற வாய்ப்பு ஏற்படுவதுடன், தொழில் வளம் மேம்படும் நிலையும் ஏற்படும். எனவே தமிழக அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story