மழையால் பாதிக்கப்பட்ட வெங்காய பயிர்கள்; தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
காரியாபட்டி அருகே மழையால் பாதிக்கப்பட்ட வெங்காய பயிர்களை தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
அழுகிய வெங்காய பயிர்
காரியாபட்டி தாலுகா ஆவியூர், அரசகுளம், மாங்குளம், குரண்டி, கஞ்சமநாயகன்பட்டி, சீகனேந்தல், நாசர்புளியங்குளம், முஷ்டக்குறிச்சி ஆகிய பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் வெங்காய பயிர்கள் அழுகிப்போய் உள்ளது. மேலும் திருகல் நோயும் ஏற்பட்டு பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு சேதம் அடைந்த வெங்காய பயிர்களை பார்வையிட்டார். பின்னர் விவசாயிகளிடம் ஆறுதல் கூறியதுடன், உரிய இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
சேதமடைந்த வெங்காய பயிர்களை பார்வையிட வந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் விவசாயிகளின் நிலை குறித்து தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. விளக்கிக் கூறினார் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
விவசாயிகள் கோரிக்கை
ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் எம்.எல்.ஏ.விடம் எங்களது பகுதிகளில் காட்டு பன்றிகள் அதிகமாக உள்ளதால் விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதாகவும், இவற்றை தடுக்க வழி வகை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.
அதற்கு மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. தெரிவித்தார். வெங்காய சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் வெங்காய நாற்று இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவற்றை பெற்று பயன் பெறுமாறும் கேட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story