சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீசார், மதுரை கோர்ட்டில் ஆஜர்; சிறையில் சிறப்பு வகுப்பு கேட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனு


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் மதுரை மாவட்ட கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்
x
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் மதுரை மாவட்ட கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்
தினத்தந்தி 11 Dec 2020 4:56 AM IST (Updated: 11 Dec 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் மதுரை மாவட்ட கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். சிறையில் சிறப்பு வகுப்பு கேட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்தார்.

குற்றப்பத்திரிகை தாக்கல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த 9 பேர் மீதான 2,027 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதில் சாத்தான்குளம் பெண் போலீசான பியுலா, ரேவதி, கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர் சங்கர், கோவில்பட்டி மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது பற்றி குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனின் விசாரணை அறிக்கையும், டெல்லியில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்தின் அறிக்கையும் அதனுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.

9 போலீசார் ஆஜர்
இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் தொடங்கியது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தனர். பின்னர் ஒத்திவைக்கப்பட்டு இருந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) வடிவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து சிறையில் இருந்து 9 போலீசாரையும் கோர்ட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அவர்கள் 9 பேரும் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சிறப்பு வகுப்புக்கு மாற்றக்கோரி மனு
அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்படுவதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். சிறையில் சிறப்பு வகுப்புக்கு தன்னை மாற்ற வேண்டும் என்றும் கோரினார்.

அதற்கு நீதிபதி, “இதுபற்றி பரிசீலிக்கப்படும்” என்றார்.

ஸ்ரீதரின் கோரிக்கை குறித்து மனுவாகவும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முடிவில், இந்த வழக்கை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் 9 போலீசாரும் மீண்டும் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

Next Story