கணவரிடம் 2-வது நாளாக விசாரணை ‘டி.வி. நடிகை சித்ரா மரணம் தற்கொலையே’ - பிரேத பரிசோதனையில் தகவல்
டி.வி. நடிகை சித்ரா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், டாக்டர்கள் அளித்த முதல் கட்ட தகவலில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியது. இந்த நிலையில், அவரது கணவரிடம் 2-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பூந்தமல்லி,
பிரபல டி.வி. நடிகை சித்ரா நேற்று முன்தினம் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட, நசரத்பேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நடிகை சித்ராவுக்கும், ஹேம்நாத் என்பவருக்கும் பதிவு திருமணம் நடந்ததால், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தநிலையில் சித்ராவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வரை அவரது கணவர் ஹேம்நாத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரிடம் எழுதி வாங்கி மீண்டும் காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நேற்று காலை 9 மணி அளவில் 2-வது நாளாக விசாரணைக்கு நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஹேம்நாத் ஆஜரானார்.
இதையடுத்து சித்ரா தங்கியிருந்த ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் 3 பேரும் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்து போன சித்ராவிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்த போது அவர், கடைசியாக தனது அம்மா விஜயாவிடம் பேசியது தெரியவந்தது.
ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கேமரா காட்சிகள் தெளிவாக இல்லாமலும், அறைக்கு முன்பாக கேமராக்கள் அமைக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. காலை தொடங்கி மாலை வரை கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியானது. அதில் சில முரண்பட்ட தகவல்களால் பெரும் குழப்பம் நிலவி உள்ளது.
அந்த முதல் தகவல் அறிக்கையில் மகள் சித்ராவிற்கும் ஹேம்நாத்துக்கும் பிப்ரவரி மாதம் 10-ந்தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, மகளுக்கு 70 பவுன் நகை போடுவதாக அவர் கூறி இருந்ததாக இருந்தது.
மேலும் அதில், படப்பிடிப்பு முடித்துவிட்டு ஓட்டல் அறைக்கு கணவருடன் வந்த சித்ரா, காரில் உள்ள பொருள் ஒன்றை எடுத்து வருமாறு ஹேம்நாத்திடம் கூறியதாகவும், அவர் வருவதற்குள் கதவை சாத்திக்கொண்டு சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவாகி உள்ளது.
ஆனால் முதலில் ஹேம்நாத் போலீசில் அளித்த தகவலில், குளித்து விட்டு உடை மாற்ற வேண்டும் சித்ரா கூறியதால், தன்னை வெளியே செல்லுமாறு அவர் கூறியதாகவும் அதற்குள் அவர் தூக்குமாட்டி கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் சித்ராவின் தந்தை அளித்த புகாரில் பதியப்பட்டுள்ள தகவலும், ஹேம்நாத் தெரிவித்த தகவலும் முரண்பட்டு உள்ளதால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவில் டாக்டர்கள் அளித்த முதற்கட்ட தகவலில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது என போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் ஹேம்நாத்தை தொடர்ந்து போலீசார் விசாரணை வளையத்திற்கு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சித்ராவின் இறுதிச்சடங்கு முடிவடைந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து சித்ராவின் குடும்பத்தினர் மற்றும் ஹேம்நாத்தின் குடும்பத்தினரிடம் விசாரணை தொடங்கப்படும் என ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி சித்ராவுக்கு நெருக்கமான நடிகர், நடிகைகள் மற்றும் விசாரணைக்கு தேவைப்படும் முக்கிய நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story