பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் வாலிபர் கைது - ரூ.55 லட்சம் தங்கம், வெள்ளி பொருட்கள் மீட்பு


பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் வாலிபர் கைது - ரூ.55 லட்சம் தங்கம், வெள்ளி பொருட்கள் மீட்பு
x
தினத்தந்தி 11 Dec 2020 3:30 AM IST (Updated: 11 Dec 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் ரூ.55 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பெங்களூரு,

பெங்களூருவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் குமாரசாமி லே-அவுட் அருகே சந்திராநகரை சேர்ந்த ரவிசங்கர் (வயது 25) என்று தெரிந்தது.

இவர், பெங்களூரு நகரில் பூட்டி கிடக்கும் வீடுகளை பகல் நேரங்களில் நோட்டமிடுவார். பின்னர் நள்ளிரவில் அந்த வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடுவதை ரவிசங்கர் தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது. இவ்வாறு திருடும் தங்க நகைகளை விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை அவர் ஆடம்பரமாக செலவு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

வீடுகளில் திருடி வந்ததாக ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு ரவிசங்கர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு மீண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. ரவிசங்கர் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு வீடுகளில் திருடிய அரை கிலோ தங்க நகைகள், 31 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.55 லட்சம் என்று மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரவிசங்கர் கைதாகி இருப்பதன் மூலம் அல்சூர்கேட், கே.ஆர்.புரம், எலெக்ட்ரானிக் சிட்டி, யஷ்வந்தபுரம், அனுமந்தநகர், சோழதேவனஹள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 7 திருட்டு வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளன. விசாரணைக்கு பின்பு ரவிசங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story