சர்வதேச விருது பெற்ற ஆசிரியருக்கு கொரோனா கவர்னர், முதல்-மந்திரியை சந்தித்தவர்
சா்வதேச விருது பெற்ற ஆசிரியர் ரஞ்சித்சிங் திசாலேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் சில நாட்களுக்கு முன் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்து பாராட்டு பெற்றவர் ஆவார்.
மும்பை,
சோலாப்பூரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியாக பணியாற்றி வருபவர் ரஞ்சித்சிங் திசாலே(வயது32). பெண் கல்வி மற்றும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கிராமத்து மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுத்தது போன்ற காரணங்களுக்காக சமீபத்தில் இவருக்கு சர்வதேச அளவிலான சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் 10 மில்லியன் டாலரும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்தநிலையில் ஆசிரியர் ரஞ்சித்சிங் திசாலேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
நானும், எனது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளோம். லேசான அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். மருந்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு ஓய்வு எடுத்து வருகிறோம். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன். உங்களின் அனைவரின் ஆதரவுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சர்வதேச விருது பெற்ற ஆசிரியர் ரஞ்சித்சிங் திசாலேவை கடந்த வாரம் மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தாரேக்கர் நேரில் சென்று பாராட்டினார்.
இதேபோல அவர் கடந்த திங்கட்கிழமை மும்பையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மாநில மந்திரிகள் மற்றும் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியும் கடந்த செவ்வாய்க்கிழமை ஆசிரியரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story