தொடர் மழையினால் முழு கொள்ளளவை எட்டியது: கடல் போல் காட்சி அளிக்கும் வீடூர் அணை


தொடர் மழையினால் முழு கொள்ளளவை எட்டியது: கடல் போல் காட்சி அளிக்கும் வீடூர் அணை
x
தினத்தந்தி 11 Dec 2020 7:51 AM IST (Updated: 11 Dec 2020 7:51 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ள வீடூர் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. பாசனத்திற்காக வீடூர் அணையை திறப்பது குறித்து இன்று ஆலோசனை நடக்கிறது.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ளது வீடூர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 32 அடியாகும். பருவமழை காலங்களில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையினால் வரக்கூடிய தண்ணீரை இந்த அணையில் தேக்கி வைத்து பின்னர் பாசனத்திற்காக திறந்து விடப்படும். இவ்வாறு இந்த அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2,200 ஏக்கர் விவசாய நிலங்களும், புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 3,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இந்த அணையில் 10 அடி அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பித்ததும் அணைக்கு தண்ணீர் வரத்தொடங்கியது. இதனிடையே கடந்த 25-ந் தேதி நிவர் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையினால் வீடூர் அணையின் நீர்மட்டம் மெல்ல, மெல்ல உயரத்தொடங்கியது. நவம்பர் 26-ந் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 19 அடியாக இருந்தது.

முழு கொள்ளளவை எட்டியது

‘நிவர்’ புயல் கரையை கடந்த நிலையிலும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதுபோல் வீடூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான செஞ்சி, மேல்மலையனூர், பனமலைப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பரவலாக பெய்த மழையின் காரணமாக தொண்டியாறு, வராகநதி வழியாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

இந்த சூழலில் ‘புரெவி’ புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியது. கடந்த 5-ந் தேதி அதிகாலை 4.45 மணியளவில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்பட்டது.

இன்று ஆலோசனை

இதற்கிடையில் மழை ஓய்ந்ததால் வீடூர் அணைக்கு நீர் வரத்தும் குறைந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் வீடூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. தற்போது 32 அடி நீர்மட்டத்துடன் வீடூர் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் பாசனத்திற்காக வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்டு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாய பாசனத்திற்காக வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணிக்கு வீடூர் அணையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்று, தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story