வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 18 பேர் கைது


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 18 பேர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2020 9:47 AM IST (Updated: 11 Dec 2020 9:47 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்து சாலைமறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை அவுரி திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்திட வேண்டும். விவசாயத்தை அன்னிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்க கூடாது. டெல்லியில் போராடும் விவசாயிகளை வஞ்சிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

சாலைமறியல்

அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரிப்பதற்காக ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு கட்சியினர் காரில் கொண்டு வந்தனர். இதை பார்த்த போலீசார் உருவ பொம்மையை பறிக்க முயன்றனர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் உருவ பொம்மையை பறித்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாரை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்தனர். அப்போது தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 18 பேரை போலீசார் கைது செய்தனர். இதேகோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய சங்க துணைத்தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் கதிர்நிலவன், மாவட்ட துணைத்தலைவர் பேரறிவாளன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ராமையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story