புதிய வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது வேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொல் திருமாவளவன் பேச்சு
புதிய வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது என்று வேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.
வேலூர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் மத்திய பா.ஜ.க. அரசு திருத்தம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் இளங்கோ வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மத்திய அரசு திருத்தம் செய்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் கொந்தளித்து எழுந்திருக்க வேண்டும். ஆனால் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் மட்டும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இது வெட்ககேடான ஒன்றாகும்.
வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு ஆபத்தான, மக்களுக்கு விரோதமான சட்டங்களை இயற்றி வருகிறது. வேளாண் சட்டங்கள் இந்திய விவசாயிகளுக்கு எதிரானது. இந்தியா, விவசாய தொழில்களை சார்ந்தே அமைந்துள்ளது. விவசாயம் செய்ய நிலம் அவசியம். நிலங்கள் இருந்தால் விவசாயம் அல்லாதவர்கள் வேலை செய்து பிழைக்க முடியும். அந்த நிலத்துக்கு ஆபத்து கொண்டு வந்துள்ளது இந்த சட்டங்கள்.
3 மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடும்பத்துடன் டெல்லியில் கடும் பனியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்த சட்டங்கள் உள்ளது. இந்த சட்டங்கள் மூலம் விளை பொருட்களை இருப்பு வைக்க உச்சவரம்பு கிடையாது. எவ்வளவு பொருட்களையும் பதுக்கி வைக்கலாம். அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய தொழிலில் கொள்ளை அடிக்க இந்த சட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.
மின்சார திருத்த மசோதா மற்றும் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்துக்களுக்கு பாதுகாப்பான கட்சி பா.ஜ.க. என்று கூறி வருகிறார்கள். ஆனால் இந்துகளுக்கு முதல் எதிரி பா.ஜ.க. தான். ஆன்மிகத்தையும், மதத்தையும் அரசியலில் கலக்கிறார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து தமிழகத்தில் கால் பதிக்க பா.ஜ.க. முயல்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், வானவில் மையம் நடத்தும் கலை பன்பாட்டு விழாவுக்கு ரஜினிகாந்தை, பிரதமர் மோடி அழைத்துள்ளது அவர்களுக்குள் இருக்கும் உறவை காட்டுகிறது. இது எந்த அளவுக்கு அவர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இடையே நடைபெறும் விமர்சனங்கள் அரசியல் அடிப்படையிலான விமர்சனங்களாக மட்டுமே இருக்க வேண்டும். தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆ.ராசா தமிழக முதல்-அமைச்சருடன் விவாதம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துகள் வேதனை அளிக்கிறது. நிவர் புயலால் சிதம்பரம் தொகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நிதி ஒதுக்கி, போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டியும், விவசாய தொழிலை பாதுகாக்க வேண்டியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். இதில், சமூக நல்லிணக்க பேரவை மாநில செயலாளர் பிலிப், தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், வேலூர் மாவட்ட துணைச்செயலாளர் பிரேம்குமார், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் தமிழ், தொண்டரணி செயலாளர் நரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், அணைக் கட்டு சட்டமன்ற தொகுதி செயலாளர் கோட்டி என்கிற கோவேந்தன் நன்றி கூறினார்..
Related Tags :
Next Story