முத்திரைத்தாள் கட்டணத்தை குறைத்து காட்டுவதற்காக ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய சேலம் துணை தாசில்தார் கைது


முத்திரைத்தாள் கட்டணத்தை குறைத்து காட்டுவதற்காக ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய சேலம் துணை தாசில்தார் கைது
x
தினத்தந்தி 11 Dec 2020 9:44 PM IST (Updated: 11 Dec 2020 9:44 PM IST)
t-max-icont-min-icon

முத்திரைத்தாள் கட்டணத்தை குறைத்து காட்டுவதற்காக ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய சேலம் துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய மகன் நிஷாந்த் (வயது 24), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வரகுராம்பட்டி என்ற பகுதியில் 1.18 ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.8¾ லட்சத்துக்கு வாங்கினார். பின்னர் இந்த நிலத்தை திருச்செங்கோடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தார்.

ஆனால் இந்த நிலத்தின் மதிப்பு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் குறைவாக இருப்பதாக சந்தேகம் அடைந்த அலுவலர்கள் சேலம் மாவட்ட முத்திரைத்தாள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பத்திரத்தை ஆய்வு செய்து சரியான மதிப்பை நிர்ணயம் செய்யுமாறு பரிந்துரைத்தனர். அதன்படி, இந்த பத்திரம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் முத்திரைத்தாள் கட்டணம் குறைத்து காட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த அலுவலகத்தில் பணியாற்றிய சேலம் காந்தி ரோடு பகுதியை சேர்ந்த முத்திரைத்தாள் கட்டண துணை தாசில்தார் ஜீவானந்தம் (47) என்பவர் நிஷாந்திடம் இதுபற்றி தெரிவித்தார். அப்போது அதிகமாக உள்ள நிலத்தின் மதிப்பை குறைத்து காட்டி முத்திரைத்தாளில் பதிவு செய்து உள்ளீர்கள். எனவே பத்திரத்தில் உள்ளப்படி காட்ட வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று நிஷாந்திடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் தருவதாக நிஷாந்த் ஒப்புக் கொண்டார்.

ஜீவானந்தம் இந்த பணத்தை காந்திரோடு சிக்னல் பகுதியில் உள்ள ஒரு கடை அருகே வந்து கொடுக்குமாறு அவரிடம் தெரிவித்தார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிஷாந்த் இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து கொண்டு நிஷாந்த் நேற்று காலை காந்திரோடு சிக்னல் பகுதிக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்த துணை தாசில்தார் ஜீவானந்தத்திடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை நிஷாந்த் கொடுத்தார். அப்போது அந்த பணத்தை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் ஜீவானந்தத்தை போலீசார் கைது செய்து லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான ஜீவானந்தம் தீயணைப்பு துறையில் வீரராக பணியாற்றிய போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி துணை தாசில்தாரராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story